சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவன் உயிரிழப்பு; வௌிநாட்டில் உள்ள வைத்தியர்களை அழைத்து வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு..!!!


லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) நடைபெற்றது.

இதன்போது, வௌிநாடு சென்றுள்ள வைத்தியர்கள் இருவரை அழைத்து வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு
பொரளை பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொஹம்மட் ஹம்தி ஃபலீம் என்ற மூன்று வயதான சிறுவன், சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது பழுதடைந்த சிறுநீரகம் இணைக்கப்பட்டு ஆரோக்கியமான சிறுநீரகம் அகற்றப்பட்டதால் உயிரிழந்தார்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையை தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, சிறுவனின் மரணம் இயற்கையான மரணம் அல்லவென தெரிவித்தார்.

ஆரோக்கியமான சிறுநீரகத்தை வைத்தியர்கள் அகற்றியதால், இந்த மரணம் நிகழ்ந்ததாகவும், இதனை கொலையாக விளங்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நல்ல நிலையில் இருந்த சிறுநீரகம் விற்கப்பட்டதா என பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயமான சந்தேகம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் பணியாற்றிய இரு வைத்தியர்கள் சத்திரசிகிச்சையின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும், பொரளை பொலிஸார் இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் நீதிமன்றில் கூறியுள்ளார்.

சிறுவனின் மரணம் தொடர்பில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளார்களா என மேலதிக நீதவான் பொரளை பொலிஸாரிடம் இதன்போது வினவியுள்ளார்.

முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் இரு வைத்தியர்களிடமும் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றம் நடந்ததாக முறைப்பாடு முன்வைக்கப்படும்போது, ​​விசாரணை நடத்த பொலிஸாருக்கு நீதிமன்ற உத்தரவு தேவையா என மேலதிக நீதவான் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான், விசாரணைகளை ஆரம்பித்து தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு பொரளை பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

இந்த வழக்கு அடுத்த மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here