பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் வந்த நீதிபதி இளஞ்செழியன்..!!!


மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் இன்றைய தினம் புதன்கிழமை நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாண மேல் நீதிமன்ற வழக்கு விசாரணைகளை முடித்துக்கொண்டு நல்லூர் பகுதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , நல்லூர் ஆலய தெற்கு வாசல் கோபுரத்திற்கு அருகில் இருவர் வீதியில் மோதிக்கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக செயற்பட்டனர்.

அதனை அடுத்து நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜெண்ட் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது , மோதலில் ஈடுபட்டிருந்த நபர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உத்தியோகபூர்வ துப்பாக்கியை பறித்து பொலிஸ் உத்தியோகஸ்தரை சுட்டதுடன் நீதிபதியின் காரினையும் நோக்கி சுட்டிருந்தார்.


துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்ததுடன் , மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்திருந்தார். நீதிபதி தெய்வாதீனமாக காயங்கள் இன்றி உயிர் தப்பி இருந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் சந்தேகநபர்களை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பிலான சுருக்கமுறையற்ற வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழக்கு பரப்படுத்தப்பட்டதை அடுத்து , சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்.மேல் நீதிமன்றில் குற்றப்பகிர்வு பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் , யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தை மன்றில் தோன்றி பதிவு செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரும் தனது சாட்சியத்தை பதிவு செய்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர் விசாரணைகளாக மூன்று நாட்கள் முன்னெடுக்க திகதியிடப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் சாட்சியம் அளிப்பதற்காக இன்றைய தினம் வருகை தந்த போது , யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு காணப்பட்டதுடன் , பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் அதிரடி படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
Previous Post Next Post


Put your ad code here