யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்..!!!


தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக அமைகின்றது.

ஆனாலும் கடந்து சென்ற தாழ்வுமண்டலங்களை விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இதன் நகரும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும், வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது.

அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

அத்துடன் 9,10 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் தாக்கம் டித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகின்றது.

அத்துடன் இந்த பாதிப்பால் விவாசாயிகள் பாரிய பயிரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்த அவர் துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது என்றும் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
Previous Post Next Post


Put your ad code here