யாழில். பழுதடைந்த இறைச்சி விற்ற உணவகத்திற்கு சீல்..!!!



யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார்.


இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத காரணத்தால் , பழுதடைந்த இறைச்சி கொத்தினை புகைப்படம் எடுத்தும் , , கொத்து ரொட்டிக்கான விற்பனை சீட்டையும் பெற்றுக்கொண்டவர் , அது தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் குழு குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , பழுதடைந்த இறைச்சிகள் மீட்கப்பட்டதுடன் , சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் காணப்பட்டதுடன் , இறைச்சியை கொள்வனவு செய்தமைக்கான பற்று சீட்டுக்கள் இல்லாதமை கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , நீதிமன்ற விசாரணைகளில் உரிமையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

அதேவேளை உணவகத்தில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் , பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தலுக்கு அமைய உணவகத்தில் திருத்த வேலைகள் செய்த பின்னர் அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிக்கை கிடைக்கப்பெற்று மன்று திருப்தி படும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது
Previous Post Next Post


Put your ad code here