யாழில் இயங்கிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி மையத்தின் பின்னணியில் தம்பதியினர் ?


யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதை பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு , போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருந்தது.


இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டில் வசித்து வந்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வீட்டின் அறையை தம்பதி ஒன்று வாடகைக்கு கொடுத்ததாகவும் , அந்த அறையில் தம்பதியினர் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த அறையில் தங்கியிருந்த தம்பதியினரில் , கணவன் யாழில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் இணைந்து கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தநிலையில் அவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது தான் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதில்லை எனவும் ,திருந்தி வாழ்வதாகவும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தெரிவித்து வந்துள்ளார்.

அவரது மனைவி யாழில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றில் தாதியாராக கடமையாற்றி வருகிறார்.

மனைவி ஊடாகவே ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு தேவையான ஆய்வு கூட பொருட்களை பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

அதேவேளை கணவன் - மனைவி இருவரும் இணைந்து தான் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டனரா அல்லது ஒருவர் உற்பத்தியில் ஈடுபட மற்றவர் உடந்தையாக செயற்பட்டனரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

தற்போது தம்பதியினர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here