பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..!!!


யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று(29.10.2024) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விமான நிலையத்தின் விமான ஓடுபாதை விஸ்தரிப்பது தொடர்பாகவும் அனைத்து விதமான சர்வதேச விமானங்களும் வந்து செல்லக் கூடியவகையில் விமான ஓடுபாதை விஸ்தரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது. விமான நிலைய அபிவிருத்தி, விமான நிலைய உட்கட்டுமான அபிவிருத்தி, விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் நலன் சார்ந்த உட்கட்டமைப்பு வசதி வாய்ப்புகள் அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

விமான நிலையத்துக்கு வந்தடைந்த பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்ளாதவாறு விமான நிலையம் மட்டுமன்றி சுற்றியுள்ள பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி செய்தல், வீதி மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேச சபைக்கு ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கான இன்றைய பெறுமதியை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Previous Post Next Post


Put your ad code here