Tuesday, 5 November 2024

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதித் தேர்தல் இன்று..!!!

SHARE

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு இன்று(05) நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று(05) மாலை 5 மணிக்கு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 186 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

அமெரிக்க தேர்தல் சட்டத்திற்கமைய முன்கூட்டியே வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் இதுவரை 75 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தமது வாக்கை பதிவுசெய்துள்ளனர்.

குடியரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

Swing States என அடையாளப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் 07 மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பிரதான வேட்பாளர்கள் கடந்த சில மாதங்களாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தனர்.

Arizona ,Georgia , Michigan , Nevada , North Carolina, Pennsylvania மற்றும் Wisconsin ஆகிய 07 மாநிலங்களே வெற்றியை தீர்மானிக்கும் மாநிலங்களாக கருதப்படுகின்றன.

இதன் காரணமாகவே இறுதி கட்ட பிரசாரங்கள் குறித்த மாநிலங்களில் நடைபெற்றன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களிக்கும் முறை மாத்திரமின்றி, “Electoral College” என்ற பிரதிநிதிகள் குழுவின் ஆதரவைப் பெற வேண்டும்.

அமெரிக்காவின் சனத்தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகளின் வாக்குகள் காணப்படும்.

இதற்கிணங்க அமெரிக்காவின் 50 மாகாணங்கள் தலைநகர் உள்ளிட்டவற்றுடன் மொத்தமாக 538 Electoral College வாக்குகள் உள்ளன.

இதில் 270 க்கும் மேற்பட்ட Electoral College வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாவார்.

2016 ஆம் ஆண்டு ஹிலரி கிளிண்டன் தேசிய அளவில் ட்ரம்பை விட 30 இலட்சம் வாக்குகளை கூடுதலாகப் பெற்ற போதிலும் Electoral College வாக்குகளை குறைவாகப் பெற்றதால் அவர் தோல்வியடைந்தார்.

இம்முறை தேர்தல் மேடையில் பொருளாதார நிலைமையே முக்கிய பேசு பொருளாக காணப்பட்டது.

நடுத்தர குடும்பத்தினருக்கு ஆதரவான திட்டங்களை முன்வைத்துள்ள கமலா ஹாரிஸ் அனைவருக்கும் சமமான வளர்ச்சிக்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, எல்லைப்பாதுகாப்பு குறித்த கட்டுப்பாட்டுக்களை தொடர்ந்தும் அமுல்படுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

யுக்ரைனுக்கான நிதி உதவியை நிறுத்த வேண்டும் எனவும் அனைத்து சர்வதேச சிக்கல்களையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

எனினும், கமலா ஹாரிஸ் யுக்ரைனுக்கான ஆதரவு தொடரும் என வலியுறுத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் கமலா ஹாரிஸ் கருத்துக் கணிப்புகளில் முன்னிலை பெற்றிருந்த போதிலும் நேற்று (04) டொனால்ட் ட்ரம்ப் ஓர் வீதத்தினால் முன்னிலை பெற்றுள்ளார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவாராயின் 290 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.

SHARE