முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் வட்டுவாகல் பாலத்தினை மூடி மழை வெள்ள நீர் பாய்வதனால், வீதியின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடுவோர் மிக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையில் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், நந்திக்கடல் நீர் மட்டம் நிரம்பியுள்ளது. அதனால், வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தினை மூடியதுடன் நீர் பாய்ந்தோடாமல் தேங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது.
அத்தோடு பாலத்தின் அணைக்கட்டுகள் சரியாக தெரியாமலிருக்கின்றது. பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
இதனால் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் பாலத்தின் இரு கரையையும் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக கூறப்படும் வட்டுவாகல் பாலம் கிட்டதட்ட 440 மீற்றர் நீளம் கொண்டதாக காணப்படுகின்றது.
வட்டுவாகல் பாலம் கடந்த 2004ஆம் ஆழிப்பேரலை அனர்த்தம், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம், என்பவற்றால் கடுமையாக சேதத்துக்கு உள்ளாகியது.
அதனை முழுமையாக புனரமைப்பு செய்யாது, சிறு சிறு திருத்தங்கள் இடம்பெற்று இன்று வரை பாவனையில் உள்ளது. இதனை முழுமையாக புனரமைத்து தருமாறு கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.