2025 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி, இன்று காலை 10:58 மணி அளவில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, ரிஷப ராசியில் இருந்து குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகி விட்டார். குரு பகவானை வேண்டிக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும். இதே குரு பெயர்ச்சியானது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி பார்த்தால் 14.05.2025 அன்று நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குரு பெயர்ச்சியின் மூலம் 12 ராசிகளுக்கு உண்டான பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நிறைய அனுபவரீதியான பாடங்களை கற்றுத் தரப் போகிறது. கிடைக்கக்கூடிய நல்ல அனுபவங்கள் வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். இன்றைக்கான வேலையை, நாளை ஒருபோதும் தள்ளிப் போடாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நிறைய நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் பருமனாக இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளவும். பிள்ளைகளுடைய நலனில் கவனம் செலுத்துங்கள், அவர்களுக்கு பொறுமையாக நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லுங்கள். வாங்கிய கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அடைப்பது நல்லது. செலவை குறைப்பது நல்லது. மாதம் தோறும் வரும் பௌர்ணமியில் நாராயணனை வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எதிர்பார்த்ததை விட நிறைய நல்ல பலன்களை கொடுக்கப் போகிறது. ஆனால் அதற்கு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். வார்த்தையில் கவனமாக பேச வேண்டும். அனாவசிய பேச்சை குறைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் முன் கோபம், அவசர முடிவு, ஈகோ பிரச்சனை இதில் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஜாக்கிரதை, மேலதிகாரிகளுடன் பணிவாக பேச வேண்டும். வியாபாரத்தில் பணிவு தேவை. நீங்கள் இளைஞர்களாக மாணவர்களாக இருந்தால், ஆசிரியர்களுக்கும் பெற்றவர்களுக்கும் கட்டாயம் மதிப்பு கொடுக்க வேண்டும். பெரியவர்கள் பேச்சை மீறி எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அவசரப்பட்டு எடுக்கும் முடிவால் தான் உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பிரச்சனைகளை கொடுக்கும். வீட்டில் உடைந்த பொருட்களை வெளியே தூக்கி போட்டு விடுங்கள். உங்களது வண்டி வாகனத்தை பழுது பார்த்து நல்லபடியாக வைத்துக் கொள்ளுங்கள். வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியை பார்த்து பயப்படுகிறீர்களா. எதிர்காலத்தில் என்ன சிக்கல் வருமோ. இனி வரக்கூடிய காலகட்டத்தில் பிரச்சனை வருமோ என்று அச்சப்பட்டால் அதிலிருந்து வெளியில் வரவேண்டும். உங்களுக்கும் குரு பகவான் நிச்சயம் நல்லது தான் செய்யப் போகின்றார். நீங்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் நிதானத்தோடு இருக்க வேண்டும். சோம்பேறித்தனத்திற்கு அடிமையாகக் கூடாது. எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவு நன்மை உங்களைத் தேடி வரும். வேலையில் பொறுமையோடு இருங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புதிய வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூட நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். சேமிப்பை அதிகரிக்க உண்டான வழிகளை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவது நபரின் விஷயத்தில் தலையிட வேண்டாம். செவ்வாய்க்கிழமை வாராகி அம்மனை வழிபட எல்லாம் உங்களுக்கு நல்லதாக நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டம் ரொம்பவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய காலகட்டம் ஆகும். எல்லா விஷயத்திலும் கவனம் இருக்க வேண்டும். ஒரு துளி அலட்சியம் கூட வேண்டாம். அலட்சியத்தோடு செய்யக்கூடிய காரியங்களை செய்யாமல் இருப்பதே நல்லது. எல்லா விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். மேலதிகாரிகளின் பேச்சை மீற வேண்டாம். குடும்பத்தில் நீயா நானா என்ற போட்டி பொறாமை இருக்கக் கூடாது. ஈகோ பார்க்க கூடாது. குறுக்கு வழியில் ஒருபோதும் சிந்திக்கவே கூடாது. மாணவர்களுக்கும் கல்வியில் அதிக ஆர்வம் தேவை. நவகிரகங்களில் இருக்கும் குருவை வியாழக்கிழமை அன்று கும்பிடுங்கள் நன்மையை நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலகட்டம் பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய காலமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த நல்ல காரியங்கள் எல்லாம் இனி வரக்கூடிய நாட்களில் நடக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். உங்களுடைய திறமையை அலட்சியப்படுத்தியவர்கள் எல்லாம், உங்களைப் பற்றி நன்றாக புரிந்து கொள்வார்கள். எதிரிகளும் கூட நண்பர்களாக மாறுவார்கள். இருக்கும் வேலையில் திறமையை காட்டுங்கள். இல்லாத ஒரு விஷயத்திற்காக தேடி அலைய வேண்டாம். யாரிடமும் வலிய சண்டைக்கு போகாதீங்க. சண்டை வந்தாலும் ஒதுங்கி நில்லுங்கள். புது எதிரியை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. மற்றபடி வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் இருந்தாலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எல்லோரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வாரந்தோறும் வரும் சனிக்கிழமையில் ஹனுமன் வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் கட்டாயம் தேவை என்ன தெரியுமா? நிதானம், பொறுமை, பொறுப்பு, தேவைப்படுகிறது. எந்த வேலையை தொட்டாலும் அதில் நிதானமாக சிந்தித்து செயல்பட்டு பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். அலட்சியம் இருக்கவே கூடாது. உங்களுடைய வேலைகளை இன்னொருவரை நம்பி ஒப்படைக்கவே கூடாது. உங்களுடைய உடைமைகளை நீங்கள் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். யாரை நம்பியாவது ஏமாற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பெரியவர்கள் சொல்வதை கேளுங்கள். புதிய முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை சிந்திக்க வேண்டும். அனுபவ சாலிகளின் ஆலோசனையை பெற வேண்டும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேல்படிப்புக்கு உண்டான முடிவுகள் எடுக்கும் போதும், நிதானம் தேவை. திங்கட்கிழமை தோறும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள் நன்மைகளை அடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நல்ல லாபத்தை கொடுக்கும். எதிர்பார்த்த இடத்தில் வேலை, எதிர் பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு இவைகளை எல்லாம் கொடுக்கும். ஆனால் வரக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் தான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்புகளை கைநழுவ விட்டால் நிச்சயம் இழப்பு உங்களுக்கு. முதலீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. யாரை நம்பியும் கடன் கொடுக்காதிங்க. கடன் வாங்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். புது நண்பர்களை நம்பி ஒரு இடத்தில் முதலீடு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் நிச்சயம் அவசரம் கூடவே கூடாது. நண்பர்கள் உறவினர்களிடத்தில் இனிமையாக தான் பேச வேண்டும். கடுமையான சொற்கள் பயன்படுத்த வேண்டாம். நிறைய கைபேசி பயன்படுத்தாதீங்க. இரவில் நேரத்திற்கு தூங்குங்கள் தினமும் நரசிம்மரை கும்பிட்டாலும், நன்மையை தரும். முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆவது நரசிம்மர் வழிபாடு செய்யவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மன தெளிவை கொடுக்கும். குழப்பத்திலிருந்து விடுதலையை கொடுக்கும். எந்தெந்த வேலைகளை எப்படி செய்யலாம் என்று ஒரு தீர்மானத்திற்கு வருவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே சமயம் கொஞ்சம் கர்ப்பமும் அதிகரிக்கும். கர்வத்தால் தலைகனத்தால், சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சின்ன சின்ன இழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஆகவே இந்த குரு பெயர்ச்சி அனுபவரீதியாக உங்களுக்கு பாடத்தை கற்றுக் கொடுக்கும். தன்னடக்கத்தோடு இருப்பவர்களுக்கு பெருசாக பிரச்சனைகள் வராது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. நீ பெரியவனா நான் பெரியவனா என்ற சண்டை வரவே கூடாது. வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபத்தை நிச்சயம் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் உழைப்பை முதலீடாக போட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். சனிக்கிழமை தோறும் பெருமாளை கும்பிட்டால் நன்மைகள் நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த குரு பெயர்ச்சி நிறைய நல்ல முன்னேற்றங்களையும் பொறுப்புகளையும் கையில் கொண்டு வந்து சேர்க்க போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வேலை பளு அதிகரிக்கும் போது, சில பல பிரச்சனைகள் வரலாம். சோர்வுகள் வரலாம். அதை எதிர் கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலையை மட்டும் நீங்கள் பார்த்தால் போதும். அடுத்தவர்களுக்கு நன்மை செய்வதாக சொல்லி, உதவி செய்து எந்த ஒரு பிரச்சனையையும் சிக்கிக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் பெற்றவர்களுக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முடியும் போதெல்லாம் வாயில்லா ஜீவன்களுக்கு பசு மாட்டிற்கு உணவு தானம் செய்யுங்கள் நன்மை நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்சியில் பணிவு தேவை. பேச்சில் அடக்கம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தேவையற்ற நண்பர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். நீங்கள் முன்னேற மேலதிகாரிகளே உங்களுக்கு துணையாக நிற்பார்கள். வியாபாரத்தை பொருத்தவரை நிதானம் தேவை. அகல கால் வைக்காதீங்க. முதலீட்டின் போது கவனம் செலுத்துங்கள். வெளியூர் பிரயாணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசுக்கு புறமான எந்த காரியத்திலும் ஈடுபடக் கூடாது. மாணவர்கள் சோம்பேறித்தனத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்வது உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டம் கொஞ்சம் சோதனையான காலகட்டமாக தான் இருக்கும். உடனே பயந்து விடாதீர்கள். உங்களுக்கு நிறைய நல்லதே அந்த குருபகவான் கொடுக்கப் போகின்றார். ஆனால் நல்லது நடக்கும் இடத்தில், வாக்குவாதமும், சின்ன சின்ன சண்டைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிரச்சனைக்கு பிறகு நல்லது வரும். எதற்கெடுத்தாலும் கோபம் வேண்டாம். அனுசரணை தேவை. நிதானம் தேவை, பணிவு தேவை, அடுத்தவர்களை உதாசீனப்படுத்தி பேசும் போது அந்த இடத்தில் நீங்கள் தலைகுனிய கூடிய சந்தர்ப்பங்கள் வந்துவிடும். கொஞ்சம் வாயை அடக்கி வைத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது. இருப்பதை வைத்து வாழ கற்றுக் கொள்ளுங்கள். அதை விடுத்து பறப்பதற்கு எந்த பிளானும் போடாதீங்க. கடனை குறைக்க முயற்சி எடுங்கள். சேமிப்பை உயர்த்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் சண்டை கூடாது. தினமும் சிவனை கும்பிட்டால் கூட உங்களுக்கு நன்மைதான். முடியவில்லை என்றால் வாரத்தில் ஒரு நாள் ஆவது சிவன் வழிபாடு செய்யுங்கள்.
மீனும்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சில பல சங்கடங்களை கொடுப்பதாக இருந்தாலும், உங்களுடைய மன நிம்மதி கெட்டுப் போகும் அளவுக்கு கஷ்டம் வராது. பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு மன தைரியம் இருக்கும். அதனால் பயப்பட வேண்டாம். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லதே நடக்கும். ஆனால் நீங்கள் செலவை குறைக்க வேண்டும். ஆடம்பர செலவுக்கு ஆளாக கூடாது. சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான வழிகளை தேட வேண்டும். கடன் வாங்கி ஒரு வேலையை செய்யவே செய்யாதிங்க. அடுத்தவர்களை பற்றி குறை கூறாதீர்கள். குறுக்கு வழியைப் பற்றி ஒரு நொடி பொழுது கூட யோசிக்காதீர்கள். பிள்ளைகள் பெற்றவர்களுடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். அனுமனை வழிபடுங்கள் நன்மையே நடக்கும்.
Tags:
Rasi Palan