2009, மே மாதம் போர்க்கால வாழ்வை மீள்நினைவுபடுத்தும் வகையில் எமது உறவுகளின் உயிர்காத்த அரிசியும், தண்ணீரும், உப்பும் கலந்தாக்கியது முள்ளிவாய்க்கால் கஞ்சி என அழைக்கப்படும்.
ஒவ்வொரு வருடமும் மே,12, தொடக்கம் மே18, வரை 07, நாட்களில் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி பொது இடங்களில் மக்களுக்கு வழங்கி நினைவு கூரப்படுகிறது. இந்த நினைவு அடுத்த சந்ததியும் இந்த அழியாத நினைவுகளை மறவாதிருக்க, «முள்ளிவாய்க்கால் கஞ்சி» அடையாளமாக பார்கப்படுகிறது.
பாத்திரங்கள் இல்லாமையால் சிரட்டைகளில் மக்கள் வாங்கி அருந்தினர்.
முள்ளிவாய்காலில் இலங்கை அரசின் திட்டமிட்ட உணவுத்தடையும், பல மாத காலத் தொடர் யுத்தத்தினாலும் மக்கள் உணவின்றித் தவித்தனர், பலருக்கு ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் பட்டினிகிடந்தார்கள், குழந்தைகளுக்கான உலர் உணவிற்கு அலைந்தார்கள். அக் காலகட்டத்தில் போராளிகளிற்காக ஒதுக்கப்பட்ட உணவுப்பொருட்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மக்களுக்கு வழங்கியது.
அந்த அரிசியை கொண்டு கஞ்சி வழங்கும் பணியும் தொடங்கப்பட்டது. இறுதிக் காலகட்டத்தில் சிறிய தொகை அரசியே இருந்தபடியால் அரிசியும் தவிடும் கலந்து உப்புமிட்டு முள்ளிவாய்க்கால்க் கஞ்சியாகக் கொடுக்கப்பட்டது. அக்கஞ்சியைத் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பல இடங்களில் செய்து மக்களின் பசியை ஆற்றினார்கள். யுத்தம் முடிவுற்றுப் பல ஆண்டுகள் உருண்டோடிப் போனாலும் யுத்தம் தந்த வடுக்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. இவ் யுத்தகால நினைவுகளில் மறக்கமுடியாதவற்றுள் ஒன்றாக விளங்குவது தான் இந்த முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சி.
இலட்சக்கணக்கான மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய வரலாறுகளும் எமது இனத்துக்கு உண்டு. இக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் எமது மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உணவுக்காகப் பட்ட அவலத்தையும், கஞ்சி உணவே எமது உறவுகளின் உயிரை தக்க வைத்தது என்பதையும் வெளிப்படுத்தும் முகமாகவும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் நினைவேந்தல் நாட்களில் கஞ்சி உணவை வழங்குவது வழமையாகும். மே 18 இன அழிப்பு நாளை நினைவு கூரும் போது முள்ளிவாய்க்கால் நிலத்தில் விடுதலைக்குப் போராடிய ஈழத்தமிழினம் பட்ட துன்பத்தையும் உலகத்தமிழினம் நினைவு கூருவது சாலத் தகுந்தது. இக்கஞ்சி உணவானது முள்ளிவாய்க்கால் யுத்தத்தின போது எமது உறவுகள் உணவிற்காக பட்ட துன்பத்தை நாம் மட்டுமல்லாது
கஞ்சியை உண்ணும்போது எமது தேசத்தின் வரலாற்றை எம் பிள்ளைகளுக்கு விளக்கி, நினைவுகளை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வோம்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி செய்ய தேவையானவை அரிசி, தண்ணீர், உப்பு இவைமூன்று மட்டுமே முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தேவை சிலர் தேங்காய்பால், பசுப்பால், இனிப்பு, பேரிச்சம்பழம் என்பன சேர்த்து தயாரிப்பது முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆகாது. வாய்க்கு ருசியிக்காக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கவில்லை வயிற்றுப்பசிக்காகவே முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது என்பதை மனதில் கொள்ளவும்..!
-பா.அரியநேத்திரன்-
12/05/2025