வடக்கில் காலை 8.30 மணி வேலைக்கு 09 மணிக்கு வரும் திணைக்கள தலைவர்கள்..!!!


பல திணைக்களங்களுக்கு அலுவலர்கள் காலை 9 மணிக்குத்தான் வருகின்றார்கள். காலை 8.30 மணிக்கு முன்னர் அலுவலகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. திணைக்களத் தலைவர்கள், அலுவலர்களின் ஒழுக்கம் - கட்டுப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை காக்க வைக்காதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் ஆளுநர்களுடனான சந்திப்பின்போது மாகாணங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை இந்த ஆண்டுக்குள் செலவு செய்யவேண்டும் என அறிவுறுத்தியதாகவும் அதற்கு அமைவாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரிய திட்டங்களுக்கு உரியவாறு செலவு செய்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

திட்டங்களை திணைக்களத் தலைவர்கள் நேரடியாகப் பார்வையிட்டு தொடர் கண்காணிப்பை முன்னெடுப்பதன் ஊடாகவே விரைவாக செயற்படுத்தி முடிக்க முடியும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், பின்தங்கிய கிராமங்களிலிருந்து மக்களின் கோரிக்கைகளை உள்வாங்கியே திட்டங்களை அடையாளப்படுத்தி நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை உரியவாறு செலவு செய்வதன் ஊடாக அடுத்த ஆண்டு அதிகளவான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும், திணைக்களங்களுக்கு இடையிலான கடிதப் பரிமாற்றங்கள் மின்னஞ்சல் ஊடாக முன்னெடுக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்திய ஆளுநர், திணைக்களத் தலைவர்கள் இதனைப் பின்பற்றவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் அவர்களால், ஒவ்வொரு அமைச்சுக்கள், அதன் கீழான திணைக்களங்களில் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக தெரியப்படுத்தப்பட்டன.

அதில் ஒவ்வொரு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் முன்னெடுக்கும் திட்டங்களில் உள்ள இடர்கள் தொடர்பில் ஆராயப்பட்டு மாற்று ஒழுங்குகள் பரிந்துரைக்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் 5 அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதன் கீழான அனைத்துத் திணைக்களங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post


Put your ad code here