ஆனையிறவில் தொடரும் போராட்டம் : பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்..!!!


கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டுசென்று பொதி செய்யும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டம் நடத்தப்படும் பகுதியில் இன்று (16) காலை பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனையிறவு உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவ கால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், அங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதிசெய்து விநியோகிக்குமாறு கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை கடந்த புதன்கிழமை (14) ஆனையிறவு உப்பளத்துக்கு முன்பாக நடத்தியிருந்தனர்.

2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பு உற்பத்தி மையத்தில் தற்காலிகமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பருவ கால ஊழியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படாமை, உரிய காலத்தில் உரிய வேதனம் வழங்கப்படாமை என்பவற்றை சுட்டிக்காட்டியும் ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டுசென்று பதனிட வேண்டாம் என்றும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டத்தின் விளைவாக, கடந்த இரண்டு நாட்களாக ஆணையிறவிலிருந்து வெளியிடங்களுக்கு உப்பு கொண்டுசெல்லப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்றைய தினம் போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டதுடன், உப்பு ஏற்றுவதற்கான வாகனங்கள் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





Previous Post Next Post


Put your ad code here