புத்தளம் - கங்கேவாடி பகுதியில் உள்ள #கலாஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது மகளை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த தந்தை நீரில் மூழ்கி பரிதாமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (3) இடம்பெற்றுள்ளது.
புத்தளம் - கற்பிட்டி பகுதியை சேர்ந்த #முஹம்மட் பரீன் ( வயது 42) எனும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை திருமணமாகி 20 நாட்களே ஆன, கற்பிட்டி வன்னிமுந்தல், முஹம்மதியா புரம் பகுதியைச் சேர்ந்த #பாத்திமா அப்சானா எனும் வயது 22 வயது இளம் பெண் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று(3) சனிக்கிழமை தமது குடும்பம் மற்றும் உறவினர்கள் என 8 பேருடன் இந்திரப் படகு ஒன்றில் கற்பிட்டியில் இருந்து வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட #கங்கேவாடி பகுதியிலுள்ள ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தமது மகள் நீரில் அடித்துச் செல்வதாக அங்கிருந்தவர்கள் கூக்குரலிட அதனை அவதானித்த தந்தை உடனடியாக ஆற்றுக்குள் பாய்ந்து நீரில் இழுத்துச் செல்லப்பட்ட தனது மகளை பாதுகாப்பான முறையில் மீட்டுள்ளார்.
இதனையடுத்து, தனது மகளோடு கூடவே இருந்து நீராடிக் கொண்டிருந்த அண்மையில் திருமணமான தனது உறவுமுறையான இளம் பெண் ஒருவரும் காணாமல் போனதை அறிந்து மீட்கும் முயற்சியில் மீண்டும் ஆற்றுக்குள் பாய்ந்த நிலையில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் பற்றி வன்னாத்தவில்லு பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவல் வழங்கப்பட்டன.
நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போயுள்ள திருமணமான இளம் பெண் பாத்திமா அப்சனாவை தேடும் பணிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து நூற்றுக்கணக்கான இயந்திர படகுகளில் மீனவர்கள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல் போன பெண்ணின் கணவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன பெண் இப்போது (இரவு 9) வரைக்கும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய(5) தினமும் இறுதியாக தேடும் பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வன்னாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news