புங்குடுதீவு அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கியது யார்?


புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புங்குடுதீவு மக்கள் சிலரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்,
தற்போதய நிருவாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிருவாகம் அமைக்கப்பட வேண்டும்,
கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா?,
கோவில் களவு போனால் முறைப்பாடு செய்வது யாரிடம்?,
பொலிஸ் முறைப்பாட்டை தலைவர் வாபஸ் வாங்க முற்பட்டது ஏன்?,
தடயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது,
அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கியது யார்?,
உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதேச செயலாளர் திரு.சிவகரன் அவர்களிடம் அதிரடி இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, * சுமார் முப்பது பேர்வரையில் எமது வேலணை பிரதேச செயலகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர், பின்னர் அவர்கள் சார்பாக மகஜர் ஒன்றை என்னிடம் கையளித்துள்ளனர். ஆகவே எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை ஆலய நிர்வாக சபையினர் மற்றும் இன்று போராட்டத்தை முன்னெடுத்தவர்கலில் மூவரையும் அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் அதன்பின்னர் முடிவெடுக்கப்படுமெனவும்* தெரிவித்தார்.

இதேவேளை இதுதொடர்பாக பொதுமக்கள் சிலரிடம் அதிரடி இணையம் கருத்துக் கேட்ட போது, பலவிதமான முரண்பாடான கருத்துக்கள் தெரிவித்தனர்.

சிலர் *இதுபோன்ற நடவடிக்கை அதாவது பொலிஸ், நீதிமன்றம், பிரதேசசபை என்று போவது, பலகோடி செலவில் கோயில்களுக்கு கோபுரம் கட்டி, கும்பாபிஷேகம் செய்வது, பின்னர் தமக்கிடையே முரண்பட்டு அதே கோயிலைகளை அரசிடம் ஒப்படைக்கும் செயல் தான் இங்கு புங்குடுதீவில் நடக்குது* என்றதுடன், *உதாரணமாக இறுப்பிட்டி பிட்டியம்பதி காளி கோயில், மாவுதிடல் நாயன்மார் கோயில் எனும் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரன் கோயில், மடத்துவெளி வயலூர் முருகன் கோயில், ஊரதீவு பானாவிடை சிவன் கோயில் வரிசையில் இப்போது கண்ணகை அம்மன் கோயிலும் வந்துள்ளது, இவர்களை அந்தக் கடவுள்கள் தான் காப்பாற்றணும்* என்றார்கள்.

இன்னும் சிலரோ *கண்ணகை அம்மன் கோயில் நிர்வாகத்திலும் தவறுகள் உள்ளது, கோயிலில் களவு போனால் உடன் பொலிஸில் முறையிடாதது எதுக்கு? கோயிலில் தானே களவெடுத்தேன் என்று சொல்லி பணத்தை ஒருவர் ஒப்படைத்தால் அவர் கோயில் ஊழியர் என்று அவருக்கு மன்னிப்பு வழங்க முடியுமா? பின்னர் பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை உடனேயே கோயில் தலைவர் ஜாமீனில் எடுப்பது முறையா*? போன்ற பலகேள்விகளை முன்வைத்து கருத்துத் தெரிவித்தனர்.

இன்னும் சிலரோ *இதுபோன்ற பிரமாண்டமான கோயிலை அமைப்பது இலகுவான காரியம் இல்லை, தற்போதைய கோயில் தலைவர் அரும்பாடுபட்டு இதனை பலகோடி செலவில் அமைத்து வருகிறார், இப்போது வெளிநாட்டில் இருந்து வந்த சிலர் இது பரம்பரையாக எமக்கு உரித்தான கோயில், ஆகவே திருவிழாக் காலங்களில் தமக்கு முன்னுரிமை தரவில்லை, முதல்மரியாதை செலுத்தி தலைப்பாகை தமக்கு கட்டவில்லை போன்ற அற்ப காரணங்களைக் கூறி புங்குடுதீவில் சிலரைத் தூண்டி விடுகிறார்கள்* எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை வெளிநாட்டில் இருந்து சென்றவர்கள் உட்பட இருதரப்பினர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதிரடி
Previous Post Next Post


Put your ad code here