நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!!!



நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியது.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான சந்தர்ப்பத்தில் அரச வைத்திய சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதால் அரசியலமைப்பின் படி, அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க அவருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் சட்டத்தரணி வாதிட்டார்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அதன்படி, அவர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.

பின்னர் குறித்த மனுவை ஓகஸ்ட் முதலாம் ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
Previous Post Next Post


Put your ad code here