நல்லை ஆதீனத்தின் கதிரை இன்னும் வெற்றிடமே - கலாநிதி ஆறு. திருமுருகன்..!!!



நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது 69 ஆவது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். மிகவும் கவலை தருகின்ற செய்தி. அவரது கதிரை இன்னும் வெற்றிடமாக இருக்கிறது என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் செயலாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தெரிவித்தார்

சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினேழாவது ஆண்டு குருபூசை வைபவம் ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வளாக அன்னபூரணி மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இளைய தலைமுறையைச் சேர்ந்த துறவற வாழ்க்கையை வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் தற்போது தடைப்பட்டுள்ள ஆதீனப் பணிகளை முன்னின்று நடாத்துவதற்கு விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விண்ணப்பம் எம்மால் உத்தியோகபூர்வமாகக் கோரப்பட்டுள்ளன.

நல்லை ஆதீன முதல்வர் உயிருடன் இருக்கும் போது யாராவது இளைஞனை ஆதீனப் பணிகளை முன்னெடுப்பதற்காக அழைத்து வருமாறு என்னிடம் அடிக்கடி மன்றாடுவார். எத்தனை பேர்களை நாங்கள் கெஞ்சிப் பார்த்தோம். எனினும், எவரும் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராகவில்லை.

அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி பெண்களில் ஒருவராகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். முழு நேரமும் தமிழ்ச் சமூகம் பற்றிய சிந்தனையுடன் இருந்தார். அவரைப்போன்றதொரு பெண்மணியை அவருக்குப் பின்னர் இன்றுவரை எம்மத்தியில் காண முடியவில்லை. பெண் பட்டதாரிகள் நிரம்பிவழிகிறார்கள். ஆண்களும் படிக்கிறார்கள். தற்காலத்தில் எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்ற நிலை காணப்படுகின்ற போதும் அர்ப்பணிப்புள்ள மனிதர்களைக் காண்பது அரிதாகவுள்ளது என்றார்.
Previous Post Next Post


Put your ad code here