மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் மன்னாருக்கு சென்ற பாரிய வாகனங்கள்..!!!



காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் பாரிய வாகனங்கள் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை வந்தடைந்துள்ளது.

குறித்த காற்றாலை மின் கோபுரங்களுக்கான பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது என கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) காலை மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி போராட்டத்திற்கு வலு சேர்த்தனர்.

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் மற்றும் மன்னார் நகருக்குள் கொண்டு வரப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களை கொண்டு வர வேண்டாம் என மக்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் சுமார் 5 இற்கும் மேற்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரங்களை ஏற்றிய வாகனம் மன்னாரை நோக்கிச் சென்றது.

பொலிஸார் அவ்விடத்தில் நின்ற மக்களை அச்சுறுத்தி பலத்த பாதுகாப்புடன் மன்னாரை நோக்கி குறித்த வாகனம் சென்றுள்ளதாக கூறப்படுகின்றமை மன்னார் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here