ரூ.25,000 நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விபரம் வெளியானது..!!!



நாட்டில் பாரிய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ25,000 நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலைத் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC) மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
 
அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், பாதிக்கப்பட்ட வீடுகளின் அனைத்து வகைகளுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவற்றில் பின்வருவன அடங்கும்,

  • முற்றிலும் சேதமடைந்த வீடுகள்
  • பகுதியளவில் சேதமடைந்த வீடுகள்
  • கட்டமைப்புச் சேதம் இல்லாவிட்டாலும், சிறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள்
  • இந்த வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுப் பிரிவும் இந்த கொடுப்பனவை பெறத் தகுதியுடையதாகும்.
  • மேலும், நிதியை பிரித்துக் கொடுப்பதற்கு முன்னர் சேத மதிப்பீடு எதுவும் தேவையில்லை.


 
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வலியுறுத்தியுள்ளதாவது, காணி அல்லது சொத்துரிமை எதைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் இந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
 
இது பின்வருவனவற்றையும் உள்ளடக்கும்,

  • நிரந்தர குடியிருப்பாளர்கள்
  • தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள்
  • வாடகை வீடுகளில் உள்ள குத்தகைதாரர்கள் (Tenants)
  • அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளில் வசிப்பவர்கள்
  • அரச வீடுகளில் வசிப்பவர்கள்
  • அரசால் பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மையங்கள்.


 
ஒரே வீட்டுப் பிரிவில் பல குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் வசிக்கும் பட்சத்தில், ரூ.25,000 தொகையை அவர்களுக்கு இடையே சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் கூறுகிறது.
 
வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்களில், கொடுப்பனவு குத்தகைதாரருக்கு மட்டுமே வழங்கப்படும்.
 
பல குத்தகைதாரர்கள் இருந்தால், தொகையை சமமாகப் பிரித்து வழங்க வேண்டும்.
 
வீட்டின் உரிமையாளரும் குத்தகைதாரர்களும் ஒரே வீட்டில் வசிக்கும் பட்சத்தில், அந்த தொகையை அனைத்து தரப்பினருக்கும் இடையில் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
 
இந்தக் கொடுப்பனவு, நவம்பர் 21, 2025 முதல் ஏற்பட்ட குறிப்பிட்ட அனர்த்தத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு முறை கொடுப்பனவாகும்.
 
முழு தொகையும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும்.
 
வீட்டு சேதங்களை மதிப்பிட்டு, தேவையான ஏற்பாடுகளை உடனடியாக கோருமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here