இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களின் உரிமைகளை அரசாங்கம் அதன் மறுசீரமைப்புத் திட்டம் மூலம் பாதுகாத்துள்ளது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு பொது நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, முன்னர் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன்படி இந்த ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் CEB ஊழியர்கள் வெளியேற்றப்பட இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆயினும், தற்போதைய அரசாங்கம் தலையிட்டு அந்தச் சட்டத்தை இடைநிறுத்தி அதற்குப் பதிலாக ஒரு மாற்றுச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
"அதை அமுல்படுத்த சட்டத்தால் கட்டுப்பட்டிருந்தோம். ஆனால் அதை நாம் நிறுத்தினோம். அதன்பின்னர் மின்சாரத் துறையைப் பாதுகாத்து, அது சுயாதீனமாகச் செயற்பட உதவும் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தினோம். நான் CEB ஊழியர்களைக் கேட்கிறேன், பழைய அமைப்பை திருத்துவது குற்றமா? வேலைநிறுத்தம் செய்வது ஒரு பிரச்சினையா? பழைய அமைப்பை திருத்துவது உங்கள் உரிமைகளை மீறுவதா? இல்லை. அவ்வாறு செய்வதன் மூலம், நாங்கள் உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துள்ளோம்" என்று ஜனாதிபதி கூறினார்.
போராட்டம் செய்ய விரும்புபவர்கள் அதைத் தொடரலாம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் சவால் விடுத்ததுடன், "அவர்களால் இவ்வாறு தொடர்ந்து செயற்பட முடியாது" என்றும் குறிப்பிட்டார்.
"நாம் CEB-ஐ நான்கு நிறுவனங்களாகப் பிரித்துள்ளோம். ஊழியர்களுக்கு எந்தத் துறைக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இரண்டு மாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு செய்ய விரும்பாதவர்களுக்கு இழப்பீட்டுடன் வெளியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:
sri lanka news