நல்லூரான் அலங்கார வளைவு அமைக்கப்படவுள்ளதால் கோவில் வீதியில் தற்காலிகமாக வீதித்தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ். மாநகர சபை வெளியிட்ட அறிவிப்பில்,
கோவில் வீதியில் சங்கிலியன் வீதிக்கு அண்மையாக நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பால் நல்லூரான் அலங்கார வளைவு அமைக்கப்படவுள்ளதால் குறித்த கட்டுமான வேலையின் பொருட்டு 18.09.2025 ஆம் திகதி முதல் 28.09.2025 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கோவில் வீதியினைப் பயன்படுத்துவோர் குறித்த பகுதியூடாகப் பயணிப்பதிலுள்ள அசௌகரியங்களை சீர் செய்வதன் பொருட்டு பருத்தித்துறை வீதி - கோவில் வீதிச் சந்தியிலும், கோவில் வீதி - சங்கிலியன் வீதிச் சந்திக்கு அருகிலும் தற்காலிகமாக வீதியினை மூடவுள்ளதால் இக்காலத்தில் இவ்வீதியினைப் பயன்படுத்துவோர் போக்குவரத்தினை சிரமமின்றி மேற்கொள்ள மாற்றுப் பாதையாகக் கீழுள்ள மாற்று ஒழுங்கினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
1. நல்லூர் மேற்கு வீதி வழியாக கோவில் வீதியைப் பயன்படுத்துவோர் நல்லூர் சிவன் கோவிலடியால் பாரதியார் சிலை சந்தியருகிலுள்ள புதிய திருநெல்வேலி வீதியூடாக (புது சிவன் வீதி) திருநெல்வேலி வீதியை அடைந்து (சிவன் வீதி) முடமாவடிச் சந்தியை அடைந்து கோவில் வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
2.முடமாவடிச் சந்தியூடாக கோவில் வீதியைப் பயன்படுத்தி நல்லூர் கோவிலை அடைவதற்கு சங்கிலியன் வீதி ஊடாகப் பருத்தித்துறை வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.