சீனா மீது 500 % வரிகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா..!!!


சீனா மீது 500 சதவீதம் வரை வரிகளை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அங்கீகரிக்க 85 செனட்டர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய்யை தொடர்ந்தும் கொள்வனவு செய்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் நேற்று(15) ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரிகள் செயற்படுத்தப்பட்டால், அமெரிக்க-சீன வர்த்தக மோதல்கள் தீவிரம் அடையும். அவை உலகளாவிய எண்ணெய் சந்தை மற்றும் சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் சீனாவை வர்த்தக ரீதியாக சீண்டுவதுடன், ஏற்கனவே பலவீனமான விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கவும் வாய்ப்புள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை ரஷ்ய – உறவுகள் காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவு அதிகரிப்பதுடன் இராணுவ தொடர்பாடல்களும் வலுவடைவதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து 60 சதவீத எரிசக்தியையும், ஈரானிடமிருந்து 80 சதவீத எரிசக்தியையும் சீனா கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை உக்ரைனை தாக்கும் ரஷ்ய ட்ரோன்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களின் பாகங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிட உள்ளதாகவும் திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிலிருந்து கனிம வளங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் செயற்பாடு நிறுத்தப்பட்டால், சீனாவின் உற்பத்திகளுக்கு விதிக்கப்படும் அதிகளவான அமெரிக்க வரிகள் ஒத்திவைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here