இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற செங்கோட்டை (Red Fort) அருகே திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில், குறைந்தது 10 பேர் பலியாகியதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
செங்கோட்டை மெட்ரோ நிலையம் இலக்கம் 1 இற்கு அருகில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவம், அதிகம் மக்கள் கூடும் பிரபலமான சுற்றுலா மையமான பழைய டெல்லி முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த வெடிப்பினால் அருகிலிருந்த பல வாகனங்கள் தீப்பிடித்தன.
சம்பவ இடத்தில் இருந்து வெளியான காணொளிகளில், சிதைந்த கார்கள், கட்டிட இடிபாடுகள் மற்றும் வீதியில் சிதறிய உடல்கள் காணப்பட்டன.
மாலை 6:30 மணியளவில் ஸ்விஃப்ட் டிசையர் கார் ஒன்று வெடித்ததாகத் தகவல் கிடைத்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை அனுப்பி, தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக லோக் நாயக் மருத்துவமனைக்கு (LNJP) கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு 8 பேர் உயிரிழந்ததை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
காவல்துறை வட்டாரம், "இது மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு," என்று கூறியதுடன், வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், தடயவியல் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கண் கண்ட சாட்சியங்கள், வெடிப்பு இடம்பெற்றபோது அதிர்ச்சியை ஏற்படுத்தும் பாரிய தீப்பந்து மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களை உலுக்கிய செவிமடுக்கும் சத்தம் கேட்டதாக விபரித்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரான சீஷான் என்ற ஆட்டோ ஓட்டுநர், "எனக்கு முன்னால் இருந்த கார் திடீரென வெடித்தது. எல்லா இடங்களிலும் தீயையும் புகையையும் கண்டேன்," என்று கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மும்பை, ஜெய்ப்பூர், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உயர்மட்ட எச்சரிக்கை (High Alert) விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவமானது, ஹரியானாவின் ஃபரிதாபாத் காவல்துறையினர் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவருடன் தொடர்புடைய சொத்துக்களில் இருந்து சுமார் 2,900 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்களைக் கண்டுபிடித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
லால் கிலா என்றும் அழைக்கப்படும் செங்கோட்டை, இந்தியாவின் மிகவும் பிரபலமான சின்னங்களில் ஒன்றாகும். மேலும், இது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாகும். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
