ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி : 80,000 குடியேற்றவாசிக்ளின் அமெரிக்க வீசாக்கள் இரத்து..!!!


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவியேற்ற ஜனவரி 20ஆம் திகதி முதல் சுமார் 80,000 குடியேற்றம் அல்லாத வீசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட இராஜாங்க திணைக்கள அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் (DUI), தாக்குதல் மற்றும் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இந்த வீசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

குற்றவியல் மற்றும் அரசியல் காரணங்கள்

இந்த வீசா இரத்துகளின் எண்ணிக்கை, ட்ரம்ப் நிர்வாகம் பதவியேற்றதில் இருந்து செல்லுபடியாகும் வீசா வைத்திருந்தவர்கள் உட்பட முன்னெப்போதும் இல்லாத குடியேற்றத் தீவிர நடவடிக்கையை (Immigration Crackdown) மேற்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.

வீசா இரத்து செய்யப்பட்டதற்கான பிரதான குற்றப் பின்னணி விவரங்கள்:

மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்: சுமார் 16,000 வீசாக்கள்

தாக்குதல்: சுமார் 12,000 வீசாக்கள்

திருட்டு: சுமார் 8,000 வீசாக்கள்

அடையாளம் வெளியிட விரும்பாத அந்த இராஜாங்க திணைக்கள அதிகாரி, "இந்த மூன்று குற்றங்களும் இந்த ஆண்டு செய்யப்பட்ட மொத்த வீசா இரத்துகளில் கிட்டத்தட்ட பாதிக்குப் பொறுப்பானவை" என்று குறிப்பிட்டார். முன்னதாக, சட்டத்தை மீறியமை மற்றும் விசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தமை ஆகியவற்றுக்காக 6,000 க்கும் மேற்பட்ட மாணவர் வீசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் சிறிய எண்ணிக்கையிலான வீசாக்கள் "பயங்கரவாதத்திற்கான ஆதரவுக்காக" இரத்து செய்யப்பட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் இராஜாங்க திணைக்களம் அறிவித்தது.

சமூக ஊடக ஆய்வு மற்றும் கடுமையான கொள்கை

ட்ரம்ப் நிர்வாகம் வீசா வழங்குவதில் கடுமையான கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இப்புதிய கொள்கையின் கீழ், சமூக ஊடகங்கள் மூலமான ஆய்வு (Social Media Vetting) கடுமையாக்கப்பட்டு, விரிவான திரையிடல் செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன.

அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை முன்னுரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்ட காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான, அல்லது ஆயிரக்கணக்கான, மாணவர்களின் வீசாக்கள் இரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ மே மாதம் தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டு இராஜாங்க திணைக்களம் விடுத்த உத்தரவுகளில், அமெரிக்காவிற்கு விரோதமாகவும், அரசியல் நடவடிக்கைப் பின்னணியுடனும் இருப்பதாக வாஷிங்டன் கருதும் விண்ணப்பதாரர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காசா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் எனவும், ஹமாஸ் ஆதரவாளர்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டு நாடுகடத்தப்படுவதற்கு உட்படுத்தப்படலாம் என்றும் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here