கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!!!


ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று (01) ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருப்பதி பெருமாள் கோயில் வடிவில் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டு 4 மாதங்களே ஆன இக்கோயில் மினி திருப்பதி என அழைக்கப்படுகிறது.

ஏகாதசியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதலே இக்கோயிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதிகபட்சம் 3 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கையாளும் திறன் கொண்ட இக்கோயிலில் இன்று சுமார் 25,000 பக்தர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இக்கோயில் தனியாருக்குச் சொந்தமானது. இன்று இவ்வளவு பேர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கோயில் நிர்வாகத்துக்கு இல்லாததால், அவர்கள் பொலிஸ் பாதுகாப்பு கோரவில்லை என கூறப்படுகிறது.

எதிர்பாராத விதமாக ஏராளமானோர் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் மூச்சு விட முடியாமல் பலர் மயங்கி விழுந்துள்ளனர். இதில், 8 பெண்கள், ஒரு குழந்தை என 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஆந்திரப் பிரதேச அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி, “காசிபுக்கா நகர் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அது தனியாருக்குச் சொந்தமானது. ஹரிமுகுந்த் பாண்டா என்ற நபர் தனது சொந்த நிதியில் 12 ஏக்கர் நிலத்தில் இக்கோயிலை கட்டியுள்ளார்.

இன்று ஏகாதசி என்பதாலும் சனிக்கிழமை என்பதாலும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு வந்துள்ளனர். 2,000 பக்தர்கள் முதல் 3,000 பக்தர்கள் வரை மட்டுமே சமாளிக்கும் திறன் கொண்டது இக்கோயில். ஆனால், சுமார் 25,000 பேர் ஒரே நேரத்தில் கோயிலுக்கு வந்துள்ளனர். ஆனால், அதற்கேற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அரசு நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்படவில்லை. விபத்துக்கு இதுதான் காரணம்.

சம்பவத்தை அடுத்து முதல்வரின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here