23வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் தங்கம் மற்றும் 02 வெள்ளிப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்த மாவட்ட விளையாட்டு வீரா் செல்வராசா ரமணனுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் கௌரவிப்பு வழங்கினார்.
மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த கெளரவிப்பு நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலர் ம.பிரதீபன்,
23வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3000 விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர், அதில் இலங்கையை சேர்ந்த 250 வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரேயொரு தமிழராக செல்வராசா ரமணன்பங்குபற்றி உயரம் பாய்தலில் தங்கப்பதக்கத்தை பெற்று சாதனை படைத்ததுடன், முப்பாய்ச்சல் மற்றும் கோலூன்றிப்பாய்தல் போட்டிகளிலும் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார். அதற்காக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், இவ்வாறானதொரு பல்வேறு நாடுகள் பங்குபற்றியஆசியப் போட்டியில் வெற்றியீட்டுவது என்பது ஓர் கடினமான விடயம்.
தான் ஒரு சர்வதேச விளையாட்டு வீரனாக இருப்பதுடன் இளம்சந்ததியினருக்கு நல்லதொரு நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டுத்துறை சாா்ந்த பயிற்சிகளை இலவசமாக பயிற்றுவித்து வரும் விளையாட்டு பயிற்சியாளராகவும் ரமணன் செயற்பட்டு வருகிறார்.
அவர் மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி மேன் மேலும் வெற்றிகளை பெற எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் , யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் வீர வீராங்கனைகள் பல சவால்களை எதிர்நோக்குவதாகவும் அதற்கமைய அமைச்சரவைக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்காக ரூபா 170 மில்லியன் நிதி ஒதுக்கீடு இவ் வருடம் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.
இக் கௌரவிப்பு நிகழ்வில் மேலதிக செயலர் கே. சிவகரன் , மேலதிக செயலர் (காணி) பா.ஜெயகரன் பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் ஸ்புட்னிக் விளையாட்டுக்கழக வீரர்கள் மற்றும் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)