தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் 'கார்த்திகை வாசம்' என்ற பெயரில் மலர்ச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் 'மலர் முற்றம்' என்ற காட்சித் திடலை கடந்த 14ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்துள்ளது.
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மலர் முற்றத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தாவர உற்பத்தியாளர்கள் காட்சிக்கூடங்களை அமைத்துள்ளனர். கூடவே, இயற்கை உரங்கள், இயற்கை கிருமிநாசினிகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள் ஆகியனவற்றை விற்பனை செய்யும் காட்சிக்கூடங்களும் அமைந்துள்ளன.
இம் மலர்க்கண்காட்சியில் தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் மலர்ச் செடிகளையும், மரக்கன்றுகளையும், இயற்கை உரங்களையும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வழமைபோன்றே இந்த ஆண்டும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றமையால் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.
பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இம் மலர்க்கண்காட்சியைப் பார்வையாளர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தினமும் காலை 8.30 மணிமுதல் முன்னிரவு 7.00 மணிவரை பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






