காதலனை நம்பி வெளிநாடு சென்ற யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான யுவதி ஒருவர், தாய்லாந்தில் உள்ள இரவு விடுதி ஒன்றிலிருந்து அந்நாட்டுப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மீட்கப்பட்ட யுவதி, தென் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அவருடன் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் யுவதி பற்றிய தகவல்கள் எதுவும் உறவினர்களுக்குக் கிடைக்காத நிலையில், அவர் வெளிநாடு ஒன்றிற்குச் சென்றுள்ளதாக மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர்.
நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த மாதம் அந்த யுவதி தனது உறவினர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கண்ணீருடன் தனது நிலையைத் தெரிவித்துள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட யுவதியின் உறவினர்கள், இது தொடர்பாகப் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளின் பலனாக குறித்த யுவதி தாய்லாந்தில் உள்ள ஒரு இரவு நேர விடுதியில் அந்நாட்டுப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
