யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் பலியாகிய நிலையில் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றையதினம் யாழ்ப்பாணம் பண்ணை பாலத்துக்கு அருகில் 4 இளைஞர்கள் பொழுதுபோக்காக தூண்டில்போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் கரையிலிருந்த தோணிப் படகொன்றில் 4 பேரும் பண்ணைக் கடலுக்குள் சென்றனர்.
பண்ணைப் பாலத்தின் அருகில் படகில் சென்ற நிலையில் பாலத்தின் ஊடான நீரோட்டத்தில் படகு அடித்துச் செல்லப்பட்டு கவிழ்ந்ததில் 4 இளைஞர்களும் கடலில் மூழ்கினர்.
இவர்களில் இருவர் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் நீந்திக் கரைசேர்ந்தனர். கரைசேர்ந்த இருவரும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றைய இரு இளைஞர்களும் நீரிழ் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.
காணாமல் போன இளைஞர்களை, அப்பகுதியிலிருந்த மீனவர்கள் சுழியோடி, பெரும் பேராட்டத்தின் பின்னர் பேச்சு, மூச்சற்ற நிலையில் மீட்டு கரைசேர்த்தனர். மீட்கப்பட்ட இளைஞர்கள் முச்சக்கரவண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
