முல்லைத்தீவு – மாங்குளத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்விப் பணிப்பாளர் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் உயிரிழந்தார்.
மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலனி பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கியுள்ளன.
இந்த சமயத்தில் அவ் வீதியால் பயணித்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் மற்றும் 03 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளன.
குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த முல்லைத்தீவு துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்வி பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த அண்டனி ஜோர்ஜ் (53 வயது) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் மகன் உட்பட குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 03 பாடசாலை மாணவர்கள் உட்பட 5 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:
sri lanka news
