இலங்கையின் உயர்கல்வித் துறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் 2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (3) தனது சான்றுரையை கையொப்பமிட்டு உறுதிப்படுத்தினார்.
இதன் மூலம் இந்தச் சட்டம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் இந்தச் சட்டமூலம், கடந்த ஜனவரி 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சராகப் பணியாற்றும் பிரதமரினால் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டத்தினூடாக பல்கலைக்கழக பீட சபைகளுக்கு (Faculty Boards), சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதலாம் தர சிரேஷ்ட விரிவுரையாளர்களில் இருந்து ஒருவரைப் பீடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன்,பீடாதிபதிகளின் பதவிக் காலத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், பதவிக் காலம் முடிவதற்கு முன்னரே அவர்களைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் பல்கலைக்கழக பேரவைகளுக்கு (University Councils) வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத் துறைத் தலைவர்களை (Heads of Departments) நியமிப்பதற்கான நடைமுறைகள் திருத்தப்பட்டுத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இவர்களது பதவிக் காலமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பேரவையினால் இவர்களைப் பதவி நீக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகரின் இந்தச் சான்றுரையுடன் இந்த திருத்தங்கள் சட்டங்களாக மாற்றப்பட்டு, பல்கலைக்கழக நிர்வாகக் கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
sri lanka news
