யாழில். குடும்ப தகராறு காரணமாக மனைவியை மது போத்தலால் குத்திய கணவன்..!!!


குடும்ப தகராறு காரணமாக தன்னை பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து , மனைவியை மதுபான போத்தலால் தாக்கி , பின்னர் உடைந்த போத்தால் உடலில் குத்தி காயங்களை ஏற்படுத்தி விட்டு கணவன் தப்பி சென்றுள்ளார்.

நாகர்கோவில் பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குடும்ப தகராறு காரணமாக கணவனை விட்டு பிரிந்து பிள்ளைகளுடன் தாக்குதலுக்கு இலக்கான பெண் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆசிரியரான குறித்த பெண் , மேலதிக வருவாயை பெறும் நோக்குடன் வீட்டின் முன்பாக சிறிய வியாபர நிலையம் ஒன்றினையும் நடத்தி வந்துள்ளார்.

அந்நிலையில் நேற்றைய தினம் இரவு வழமை போன்று தனது வியாபர நிலையத்தில் வியாபர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை கணவன் , மதுபோதையில் கையில் மதுபான போத்தலுடன் வியாபர நிலையத்தினுள் புகுந்து மனைவி மீது மது போத்தலால் தலையில் தாக்கியுள்ளார்.

அதில் போத்தல் உடைந்ததும் , உடைந்த கண்ணாடி போத்தலால் வயிறு , நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

காயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்ற அப்பெண்ணின் கணவனை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாய் மீது தந்தை தாக்குதலை நடத்துவதை தடுக்கும் முகமாக அவர்களது சிறுவயது மகன் தந்தையை தடுக்கும் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்த நிலையில் , அந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here