காணிப்பிணக்கில் ஒருவரை அடித்து கொன்ற குற்றம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை..!!!



காணி பிணக்கொன்றில் நபர் ஒருவரை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

விவசாய காணி ஒன்று தொடர்பான பிணக்கு காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு தை மாதம் 22ஆம் திகதி நா, மகேஸ்வரலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற வழக்கு விசாரணைகள் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து வழக்கு கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில் , கடந்த 2020ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்ற பகிர்வு பத்திரத்தை தாக்கல் செய்ததை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணைகளை நடைபெற்று வந்த கால பகுதியில் எதிரிகளில் இருவர் மரணமடைந்த நிலையில் , ஏனைய மூவருக்கும் எதிராக வழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்ட நிலையில் வழக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , வழக்கு விசாரணைகள் சாட்சியங்கள் அடிப்படையில் எதிரிகள் மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அரச தரப்பு சட்டத்தரணிகளால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து , மூவரையும் கொலை குற்றவாளிகளாக கண்ட மன்று மூவருக்கும் மரண தண்டனை விதித்தது.

குறித்த வழக்கினை அரச சட்டவாதிகளான எம்.ஏ.எம்.லாபீர் மற்றும் அனுசாங்கன் ஆகியோர் நெறிப்படுத்தினார்கள்.
Previous Post Next Post


Put your ad code here