ஓமான் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல்..!!!


ஓமானின் முசந்தம் கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று தாக்கப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் ஞாயிற்றுக்கிழமை (1) தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான 'ஸ்கைலைட்' எனும் பெயருடைய இந்த எண்ணெய் தாங்கிக் கப்பல், மேற்கு பசிபிக் தீவு நாடான பலாவ் நாட்டின் கொடியுடன் பயணித்துள்ளது.

இத்தாக்குதலில் கப்பலில் இருந்த 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், கப்பலில் இருந்த 20 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஓமான் கடற்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

"கடல்சார் விபத்துக்களைக் கையாள்வதில் எமது நாட்டின் தயார் நிலையை இந்த மீட்பு நடவடிக்கை பிரதிபலிக்கிறது" என ஓமான் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான புதிய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் ஓமான் ஒரு முக்கிய மத்தியஸ்தராகப் பணியாற்றி வந்த பின்னணியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து கண்டறிவதற்கு ஓமான் பாதுகாப்புத் தரப்பினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here