நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்..!!!


எரிபொருள் விநியோகத்திற்காக கியூ.ஆர் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் நிலவவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை 6.00 மணி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

முன்னதாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட கியூ.ஆர் குறியீடுகளைத் தற்போதும் பயன்படுத்த முடியும்.

இதுவரை கியூ.ஆர் குறியீடு இல்லாதவர்கள், வாகனத்தின் உரிமையாளர் மாறியவர்கள் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியவர்கள் fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

இணையத்தளத்தில் "Vehicle Registration" பகுதி ஒரு மணித்தியாலத்திற்குள் புதுப்பிக்கப்படும்.

இன்று முதல் கியூ.ஆர் குறியீடு இன்றி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் வழங்கப்படமாட்டாது.

கடந்த சில நாட்களாகப் பொதுமக்கள் எரிபொருளைச் சேமிக்க ஆரம்பித்ததாலும், சில ஊடக அறிக்கைகளாலும் எரிபொருள் வரிசைகள் உருவானதாக நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இது ஒரு ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடும் என்பதால், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்த்து, முறையாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதே இந்த கியூ.ஆர் முறை செயல்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here