இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்றைய தினம் கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்று காலை கொலன்னாவ முனையத்திற்கு வருகை தந்த எரிபொருள் பவுசர்கள், எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்ததாக ' செய்தியாளர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமை பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே நேற்று (20) தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இவ்வாறானதொரு பின்னணியில் இன்று கொலன்னாவ முனையத்திற்கு வந்த பவுசர்கள் எரிபொருள் இன்றித் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் இன்று (21) மேற்கொள்ளப்பட்ட வினவலின் போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமை பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது:
"நேற்று இரவு வரை 10,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான டீசலை நாங்கள் விநியோகித்தோம். அதேபோல் 7,000 மெட்ரிக் தொன் பெட்ரோலையும் விநியோகித்தோம்."
"சாதாரணமாக ஒரு நாளைக்கு நாங்கள் 4,880 மெட்ரிக் தொன் டீசலையே விநியோகிப்போம். அந்த வகையில் நேற்றைய தினம் இரு மடங்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது."
"நேற்று (20) மற்றும் இன்று (21) ஆகிய தினங்களுக்கு அனுப்ப வேண்டியிருந்த அனைத்து முன்பதிவு ஓடர்களையும் (Orders) நேற்று இரவுக்குள்ளேயே நாங்கள் அனுப்பி வைத்துவிட்டோம்."
"இன்று காலை வேளையில் அத்தியாவசிய சேவைகள், டிப்போக்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விமான எரிபொருள் விநியோகம் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளித்துள்ளோம்."
"அதற்கு மேலதிகமாக, இன்று பிற்பகலளவில் ஏதேனும் இடங்களுக்குத் தேவை ஏற்படின், அந்த இடங்களுக்கு விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்."
"எமது சப்புகஸ்கந்த, கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல ஆகிய மூன்று பிரதான முனையங்களும் தற்போது திறக்கப்பட்டு எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது."
"எவ்வாறாயினும், விநியோகஸ்தர்களால் இன்றைய தினத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த முன்பதிவுகள் அனைத்தையும் நேற்று இரவே நிறைவு செய்ய நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம்."
"ஒரு பவுசரை நிரப்பி வைத்திருப்பதற்காக நாங்கள் எரிபொருள் வழங்குவதில்லை. இன்று பிற்பகலளவில் நிலமையை அவதானித்து, தேவைப்படின் இன்று மாலை அல்லது நாளை காலை தேவையான அளவை விநியோகிப்போம். கடந்த போயா தினத்திலும் விநியோகம் செய்திருந்தோம்."
"மே மாதம் முதல் வாரம் வரை எம்மிடம் எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை." என்றார்.
Tags:
sri lanka news
