எரிபொருள் விலையேற்றம் தவிர்க்க முடியாதது - ஜனாதிபதி விளக்கம்..!!!



உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, உள்நாட்டிலும் விலைகளை உயர்த்துவது அவசியமான ஒன்றாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விலை அதிகரிக்கப்படாவிட்டால், தனியார் துறையினரின் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.

நாட்டின் எரிபொருள் தேவையில் 43 சதவீதத்தை தனியார் துறையும், 53 சதவீதத்தை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனமும் பூர்த்தி செய்கின்றன.

மார்ச் 2 முதல் 18 வரையிலான காலப்பகுதியில் பெட்ரோல் 92-ன் விலை 55% ஆகவும், டீசல் 74% ஆகவும் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 1 டொலர் உயரும் போது, உள்நாட்டில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 2 ரூபாவால் அதிகரிக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரு கப்பல் எரிபொருளை இறக்குமதி செய்யும் போது தமக்கு 55 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாக தனியார் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்நிலை தொடர்ந்தால் அவர்களால் மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் மட்டும் விலையை உயர்த்தினால், கூட்டுத்தாபன நிலையங்களுக்கும் அவற்றுக்கும் இடையே 100 முதல் 150 ரூபா வரை விலை வித்தியாசம் ஏற்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் கூட்டுத்தாபன நிலையங்களை முற்றுகையிடும் சூழல் உருவாகும்.

எதிர்பார்க்கப்படும் விலை அதிகரிப்பின் போது, பொதுமக்களுக்கு அல்லது குறிப்பிட்ட இலக்குக் குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், எனினும் தற்போதைய கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள் காரணமாக தகுதியானவர்களை அடையாளம் காண்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here