தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளம் ஒன்று தற்போது உலாவருவதாக முன்னணி சைபர் பாதுகாப்பு மூலோபாய நிபுணர் அசேல வைத்யாலங்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றி, அவர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த போலியான இணையத்தளத்தை உருவாக்கியுள்ளனர்.
இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வைத்யாலங்கார,
"உத்தியோகபூர்வ தளம் போன்றே தோற்றமளிக்கும் இந்தத் தளத்தில் உங்களது எந்தவொரு தனிப்பட்ட விபரங்களையும் உள்ளிட வேண்டாம்" என வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தவிர மற்றைய எந்தவொரு இணையத்தள முகவரிகளிலோ அல்லது குறுஞ்செய்திகள் (SMS) மூலம் வரும் இணைப்புகளிலோ (Links) உங்களது வாகன இலக்கம், தொலைபேசி இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை விபரங்களை வழங்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டில் மீண்டும் எரிபொருள் ஒதுக்கீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்தி, அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் பொதுமக்களை இலக்கு வைத்து இத்தகைய இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளன.
எனவே, சரிபார்க்கப்பட்ட உத்தியோகபூர்வ தளங்களை மாத்திரம் பயன்படுத்த வேண்டும்.
