ஏப்ரல் முதல் இரவு நேர மின்வெட்டு? இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பு கடும் நெருக்கடியில்..!!!


இலங்கையின் மின் உற்பத்தி கட்டமைப்பானது கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் திட்டமிடப்பட்ட மின்தடைகளை அமுல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பல காரணிகள் ஒன்றாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான நீர்மின் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. மார்ச் 24 ஆம் திகதி நிலவரப்படி, காசல்ரீ (30 வீதம்), கொத்மலை (28 வீதம்) மற்றும் விக்டோரியா (66 வீதம்) என்ற அளவிலேயே நீர் இருப்பு உள்ளது.

ஒரு அலகு டீசல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசாங்கத்திற்கு சுமார் 90 ரூபா செலவாகிறது. மாலை நேர உச்சப்பயன்பாட்டு நேரத்தில் நிலவும் 150 மெகாவாட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தினசரி 36 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் எரிபொருள் மற்றும் நிலக்கரி இறக்குமதியில் தடைகள் ஏற்பட்டுள்ளதோடு, அவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன.

நுரைச்சோலை மின்நிலையத்தில் நிலக்கரியின் தரம் தொடர்பான சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன.

நாடு தழுவிய ரீதியில் பாரிய மின் முறிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க, குறுகிய கால சுழற்சி முறையிலான மின்வெட்டுக்களே ஒரே தீர்வு என மூத்த பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் இரவு 6 மணி முதல் 10 மணி வரை இந்த மின்தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணவும், பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்கவும் இது அவசியமாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அட்டவணை எதுவும் வெளியிடப்படவில்லை. இது ஒரு இறுதி முயற்சியாகவே எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பகல் நேரங்களில் சூரிய சக்தி (21 வீதம்), நீர்மின் (14 வீதம்) மற்றும் அனல் மின் (26 வீதம்) என மின்சாரம் பெறப்படுகிறது. இருப்பினும், இலங்கையிடம் போதிய மின்கல சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் 1,500 மெகாவாட் சூரிய சக்தியைப் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் இரவு வேளையில் நீர்மின்சாரத்தின் தேவை 42 சதவீதமாக உயர்கிறது.

2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்பில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஈடு செய்ய இலங்கை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுவரை, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here