யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருளுக்கு QR நடைமுறையினை பின்பற்ற வலு சக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண அதிபர் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலரை சந்தித்து, எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவற்றால் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் , எரிபொருள் பெறுவதற்கு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை தொடர்வதாகவும், அதனால் அதிபர்கள் ஆசிரியர்கள் தங்கள் கடமையை சிறப்பாக நிறைவேற்ற முடியாமல் காணப்படுவதாக தெரிவித்தனர்.
எனவே சிறப்பாக கடமைகளை செய்வதற்கு எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து தேவைக்கேற்ப நியாய முறையில் பகிர்ந்தளிக்க கோரியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த மாவட்ட செயலர்,
QR நடைமுறையினை பின்பற்றுவது தொடர்பாக வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதன்கிழமை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 36 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் (Ceypetco) பெற்றோல் விநியோகிக்க பெட்ரோல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோலுக்கான வரிசை குறையும் என நம்புவதாக தெரிவித்தார்.
