யாழ். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த 22 வயதுடைய சனுயன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பல எதிர்பார்ப்புக்களுடன் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான செயல்முறைப் பயிற்சிக்குத் தோற்றி, தனது பயிற்சியை முடித்துவிட்டு வீதியை கடக்க முயன்ற போதே, அதிவேகமாக வந்த மீன் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோதுண்டு இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இந்த மரணம் வெறும் விபத்தல்ல. அதிகாரத் தரப்பினரினதும், தனியார் நிறுவனங்களினதும் பொறுப்பற்ற செயற்பாடுகளால் அரங்கேறிய ஒரு 'படுகொலை' என்றே சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை யாழ். பண்ணை வீதியானது உடற்பயிற்சி செய்வோர், கடற்கரைப் பூங்காவிற்கு வருபவர்கள் என நாளாந்தம் அதிக மக்கள் கூடும் ஒரு பகுதியாகும்.
அண்மைக்காலமாக இப்பகுதியில் தனியார் சாரதி பயிற்சி நிலையங்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி மாணவர்களைக் குவித்து பயிற்சிகளை வழங்கி வருகின்றன.
அத்துடன் தீவகத்திற்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாக விளங்கும் இந்த இரட்டைப் பாவனை வீதியில், தற்போது நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பேருந்துகளும் தனியார் வாகனங்களும் நிமிடத்திற்கு ஒன்றாக அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய ஆபத்தான சூழலிலேயே, எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி இப்பகுதி ஒரு பயிற்சி மைதானமாக மாற்றப்பட்டுள்ளது.
இது ஒதுபுறம் இருக்க அதிவேகமாக வாகனங்கள் செல்லும் ஒரு பிரதான நெடுஞ்சாலையின் நடுவே, ஒரு மாணவனை வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டது சாரதித்துவ ஆசிரியரின் வீதிச் சட்ட அறியாமையையே காட்டுகிறது.
தமக்கென நிரந்தர பயிற்சித் திடல்களைக் கொண்டிராத இந்த நிறுவனங்கள், நினைத்த இடத்தில் பயிற்சிகளை வழங்கி இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக உள்ளன.
மறுபுறம் பண்ணை வீதியின் வர்த்தக நோக்கிலான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் வரி அறவீடு செய்யும் யாழ். மாநகரசபை, அவ்வீதியால் செல்லும் பொதுமக்களினதும் வாகனங்களினதும் பாதுகாப்பு குறித்து எவ்வித ஒழுங்குவிதிகளையோ கட்டுப்பாடுகளையோ இதுவரை விதிக்கவில்லை ஏன்? என்ற கேள்வி மக்களிடையே வலுவாக எழுகின்றது.
சாதாரண நாள்களில் வீதிகளில் மறித்து 'லைசன்ஸ்' முதல் 'பிரேக் லைட்' வரை நுணுக்கமாகக் குற்றம் கண்டுபிடிக்கும் போக்குவரத்து பொலிஸாருக்கு, இத்தனை காலம் பிரதான நெடுஞ்சாலையை மறித்து சட்டவிரோதமாக நடத்தப்படும் இப்பயிற்சிகள் கண்ணுக்குத் தெரியாமல் போனது எப்படி? என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
முன்னர் யாழ். முனியப்பர் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்று வந்த இப்பயிற்சிகள், ஆட்சி மாற்றத்தின் பின் யாழ். கோட்டைச் சுற்றவட்டம் தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே, எவ்வித அனுமதியுமின்றி பண்ணை வீதிக்கும் புகையிரத நிலைய வீதிக்கும் மாற்றப்பட்டன.
உரிய மாற்று இடங்களை ஒழுங்குபடுத்தித் தராமல் நிர்வாகங்கள் கைகழுவியதன் விளைவை இன்று ஓர் இளம் உயிர் தனது உயிரால் ஈடு செய்துள்ளது.
இதேபோன்றதொரு ஆபத்து யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களாலும் வார இறுதி நாட்களில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் வகுப்புகள் முடிந்து வெளியேறும் போது, பிரதான வீதிகள் முடக்கப்பட்டு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இதற்கும் முறையான பொறிமுறை இல்லாததால், எதிர்காலத்தில் கல்வி நிலைய மாணவர்களும் இத்தகைய விபத்துக்களை எதிர்கொள்ளும் அபாயம் இருக்கின்றது.
'சட்டம் ஒழுங்கு', 'மக்கள் பாதுகாப்பு' என நாள்தோறும் குளிரூட்டப்பட்ட அறைகளில் கூட்டங்களை நடத்திப் பேசிக்கொண்டிராது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும்.
உயிரிழந்த இளைஞனின் குடும்பத்திற்கான பரிகாரத்தை வழங்குவதுடன், தனியார் சாரதி பயிற்சி நிலையங்களுக்கு என தனியான, பாதுகாப்பான திடல்கள் ஒதுக்கி இவ்வாறான விபரீதங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.
அத்துடன் பிரதான வீதிகளில் பயிற்சிகளை மேற்கொள்ள முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று தனியார் கல்வி நிலையங்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் துரித பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிமேலும் ஒரு உயிர் இவ்வாறான நிர்வாகச் சீர்கேடுகளால் பறிபோகக் கூடாது என்பதே ஒட்டுமொத்த யாழ் வாழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
