மஹர சிறைச்சாலை மோதலில் கைதி ஒருவர் உயிரிழப்பு,6 பேர் ராகம வைத்தியசாலையில் அனுமதி..!!!


மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னதாக, மஹர சிறைச்சாலையில் இன்று (01) மாலை கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் தகராறு, பின்னர் பெரும் மோதலாக மாறியது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து, சிறைச்சாலையிலுள்ள பிரதான ஜெயிலரின் அலுவலகம் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவற்றுக்குக் கைதிகள் தீ வைத்துள்ளனர்.

அத்துடன் சிறைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக, கைதிகளைப் பார்க்க வருகை தந்து வெளியே காத்திருந்த உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிக சிறை அதிகாரிகளுடன், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறை வளாகத்திற்கு வெளியே தீவிர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலதிக விசாரணைகளுக்காகப் பல விசேட பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், இச்சம்பவம் குறித்துச் சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை
Previous Post Next Post


Put your ad code here