நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகம் சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது..!!!


நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய NUPL 2.0 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில்(03.10.2026 ), நீர்வேலி ஐக்கிய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

நீர்வேலி ஐக்கிய மற்றும் சென்மேரிஸ் அணிகள் மோதிய இறுதிப்போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியின் பின்னர் சென்மேரிஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. தொடக்கம் முதலே நீர்வேலி ஐக்கிய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டு சென்மேரிஸ் அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

இதன் காரணமாக சென்மேரிஸ் அணி 10 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 48 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனையடுத்து நீர்வேலி ஐக்கிய அணிக்கு 49 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சிறிய இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நீர்வேலி ஐக்கிய அணிக்கும் ஆட்டம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. சென்மேரிஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், நீர்வேலி ஐக்கிய அணி சில விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், பொறுப்புடன் துடுப்பெடுத்தாடிய நீர்வேலி ஐக்கிய அணியின் வீரர்கள் இலக்கை நோக்கி முன்னேறினர். இறுதியாக 8.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்று, வெற்றி இலக்கை எட்டினர்.

இதன் மூலம் நீர்வேலி ஐக்கியம் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று NUPL 2.0 தொடரின் சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக கைப்பற்றியது.

- சர்மிலன் - 



Previous Post Next Post


Put your ad code here