உலக இருபதுக்கு - 20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடத்துவது குறித்து எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக உலக இருபதுக்கு - 20 தொடர் நடத்தப்படுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.சி.சி.யின் கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐ.சி.சி.யின் நிர்வாகிகள் சபை கூட்டம் ‘வீடியோ கொன்பரன்ஸ்’ மூலம் நேற்று நடைபெற்றது.
ஐ.சி.சி. தலைவர் ஷஷாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த காணொலி கூட்டத்தில் மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர். இந்தக் உலக இருபதுக்கு - 20 இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் ஐ.சி.சி. இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இவ்விடயம் தொடர்பில் ஜூன் மாதம் 10 ஆம் திகதியன்று தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஐ.சி.சி.யின் கூட்டத்தில் அதன் இரகசியத் தன்மை மீறப்படுவதாக பல்வேறு நாட்டு கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். ஐ.சி.சி. விவகாரங்களின் புனிதத் தன்மையும், இரகசிய தன்மையும் மிக உயர்ந்த ஆளுமைக்கு ஏற்ப உறுதி செய்வதற்கு உடனடி கவனம் தேவை என்று உணரப்பட்டது.
இது தொடர்பாக ஐ.சி.சி நெறிமுறை அதிகாரி தலைமையில் சுதந்திரமான விசாரணையை ஆரமப்பிக்கபடும் என்று ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜூன் 10 ஆம் திகதியன்று நடைபெறும் கூட்டத்தில் அனைத்து விடயங்கள் குறித்தும் முடிவு செய்யப்படும் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.9
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக இருபதுக்கு - 20 தொடருக்கு பி.சி.சி.ஐ.-யால் வரிவிலக்கு பெற முடியாத திறமையின்மை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வரிவிலக்கு இல்லை என்றால் உலக இருபதுக்கு - 20 தொடர்-2021, இந்தியாவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவோம் என ஐ.சி.சி. ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளாவது,
“இதில் அச்சப்பட எதுவுமில்லை. நான் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். ஐ.சி.சி. மற்றும் இந்திய மத்திய அரசிடம் எங்களது குழு தொடர்ந்து இணைப்பில் இருப்பதால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும்”
என்றார்.
Tags:
Sports News