“தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும். மக்களுக்கு எத்தகைய விடயங்கள் தேவையோ அதனை யார் செய்வார்கள் என்பதை சுயமாகவே அவர்கள் ஆராய்ந்து அத்தகையவர்களை தெரிவு செய்யவேண்டியது மக்களிடம்தான் உள்ளது”
இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் பவதாரணி இராஜசிங்கம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
தமிழ் மக்கள் நீண்டகாலமாகவே பல போராட்டங்களைச் சந்தித்து வருகின்றார்கள். அவ்வாறான நிலையில் நாங்கள் எதனைப் பெற்றுக்கொண்டோம், எதனைச் செய்யவேண்டும், எவ்வாறு செய்யவேண்டும் என்பது தொடர்பில் மக்கள் சிந்திக்கவேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பித்தவுடன் பல கட்சிகள் பல சுயோட்சைக்குழுக்கள் மக்களிடம் வாக்குக் கேட்பதற்காக வருகை தருகின்றார்கள். இவர்களில் எத்தனைபேர் மக்களுடன் இருந்துள்ளார்கள். மக்களுக்காக எதனைச் செய்துள்ளார்கள். மக்களின் தேவைகளை இவர்கள் உணர்ந்துள்ளார்களா? என்பதை மக்களே தீர்மானிக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் எமது கட்சியில் இருந்து தேசியப் பட்டியல் நாடாளுமன்றம் சென்று எவ்வளவோ விடயங்கள் மக்களுக்காக செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏனையவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றவர்கள் என்னத்தைச் செய்துள்ளார்கள்.
எனவே நாடாளுமன்றம் சென்றால் யார் எத்தகைய விடயங்களை செய்வார்கள் என்பதை மக்கள் தாங்களாகவே உணர்ந்து அவ்வாறானவர்களுக்கு தமது வாக்குகளை வழங்கவேண்டும். என்னைப்பொறுத்தவரையில் ஆசிரியர்கள், தொழில் முயற்சியாளர்கள் போன்வர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை வகுத்து முன்னேற்றுவதே எனது நோக்கமாகவுள்ளது.
இவ்வாறான பல்வேறு திட்டங்கள் எம்மிடமுள்ளது. எனவே மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாக யாரைத் தெரிவு செய்யவேண்டும் என்பதை அவர்களே முடிவெடுத்து சரியானவர்களை தெரிவுசெய்யவேண்டும் – என்றார்.
Tags:
sri lanka news