வடக்கு மாகாணத்தில் ‘மாஸ்க்’ அணியாதோர் மீது சட்டம் பாயும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு..!!!


“வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிவரும் நாள்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்”

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று மாலை வெளியிட்டுள்ள சிறப்பு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நமது நாட்டில் கோரோனா நோய் தொடர்பான அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்லும் பொழுது முகக் கவசம் அணிவதும், குறைந்தது இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவதும், சரியான முறையில் கைகளை அடிக்கடி கழுவுவதும் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தற்போது நமது நாட்டில் மக்கள் வீட்டிற்கு வெளியில் செல்லும்போதும், பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வருகை தரும் பொழுதும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முகக் கவசம் அணியாது நடமாடுபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவார்களென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிவரும் நாள்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே மக்கள் பொது இடங்களில் நடமாடும்போது கட்டாயமாக முககவசம் அணிவதை உறுதிப்படுத்துவதன் மூலம் தங்களையும் தங்கள் சமூகத்தினையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதுடன் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்

Previous Post Next Post


Put your ad code here