மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம்: தனி வீடுகளையே நாம் அமைப்போம் – ஜீவன்..!!!


மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் கலாசார நிலையத்தில் 9ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மலையகத்துக்கான வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதமருடன் அண்மையில் கலந்துரையாடல் நடத்தினோம்.

எனினும் மாடி வீடு தொடர்பாக தவறான கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. கூரைக்கு பதிலாக ‘கொங்ரீட்’ போட்ட தனி வீடுகளையே நாம் அமைக்கவுள்ளோம். எனவே, போலித் தகவல்களை நம்பவேண்டாம். விரைவில் உண்மை என்னவென்பதை உங்களால் நேரில் காணமுடியும்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபத்தின் கீழ் நான்கு நிறுவனங்கள் வருகின்றன. அவை தொடர்பாக கலந்துரையாடினோம். மேற்படி நிறுவனங்களில் வளப்பற்றாக்குறை இருந்தது. அவை குறித்து சுட்டிக்காட்டினோம்.

அதேவேளை, கலைஞர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான களத்தை அமைத்துக்கொடுத்து உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும்.

கலைஞர்கள் வாழ்ந்தால் மட்டுமே கலைகள் வாழும். அவ்வாறு இல்லாவிட்டால் கலைகள் அழிந்துவிடும். எனவே, கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்காமல் கலைகளை பாதுகாக்கமுடியாது. அதனை நாம் நிச்சயம் செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here