Wednesday 30 September 2020

தனுரொக் மீது வாள்வெட்டு; ‘ஆவா’ வினோதன் நீதிமன்றில் சரண்..!!!

SHARE

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ‘ஆவா’ வினோதன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்தார். அவரை வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதி – பெருமாள் கோவிலடியில் வைத்து கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. கார் ஒன்றில் வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் சென்ற தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தனுரொக், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தனுரொக் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொக்குவிலைச் சேர்ந்த மோகன் அசோக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அத்தோடு மேலும் மூவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், காரின் உரிமையாளரை அழைத்து வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை விடுவித்திருந்தனர்.

கொலை முயற்சி சந்தேக நபர்கள் நால்வர் மீதும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் நால்வரும் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் தனுரொக்கின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இணுவிலைச் சேர்ந்த ‘ஆவா’ என்று பொலிஸாரால் அழைக்கப்படும் வினோதன் தேடப்பட்டு வந்தார். அவர் இன்று தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார். அவரையும் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE