இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன.
மேலும், தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை இந்திய மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து அகதிகளாக சென்று இந்தியாவில் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பில் நாம் ஆராய்தோம்,
இதன்போது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் 401 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களை சிகிச்சை நிலையங்களில் அனுமதித்ததுடன், அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அகதிகள் முகாம்களுக்கான ஒப்பந்த ரீதியான நிறுவன வைத்திய அதிகாரி எஸ். நடராஜன் குறிப்பிட்டார்.
இதன்படி, 401 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, தற்போதைய நிலைமையில் 28 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்படும் நபர்கள், அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அவர்கள் 48 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேபோன்று, முகாம்களில் தங்கவைக்க்பட்டுள்ளவர்களில் 5 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா தொற்றுப்பரிசோதனை இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகாதார துறையினரால் வழங்கப்படும் அறிவுறுத்தலுக்கு அமைவாக முகாம்கள் செயற்படுத்தப்படுவதினாலும், முகாம்களில் உள்ளவர்கள் அதனை முறையாக பின்பற்றுவதற்கு உதவுவதினாலும் கூடிய அளவில் தொற்றைக் கட்டுப்படுத்த முடியுமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், போதிய வைத்திய வசதிகள் அரசாங்க தரப்பிடம் இருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் வைத்திய அதிகாரி எஸ் நடராஜன் குறிப்பிட்டார்.
மேலும், அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் இதுவரை கொரோனா தொற்றினால் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, தொழிலுக்காக வேறு இடங்களுக்கு சென்றவர்கள் மற்றும் பிரயாணத்தில் ஈடுபட்ட நபர்கள் ஆகியோரின் ஊடாக இவ்வாறு நோய்தொற்று பரவியுள்ளதாக அகதிகள் முகாம் நிர்வாக திட்ட ஒருங்கிணைப்பாளர் அகிலா ரட்ணராஜசிங்கம் தெரிவித்தார்.
தொடர்குடியிருப்புகளில் அவர்கள் வசித்து வருவதன் காரணமாக ஆரம்பத்தில் நோய்த் தொற்று அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்திருந்ததாகவும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அகிலா ரட்ணராஜசிங்கம் தெரிவித்தார்.
இந்த நிலையில், மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் சுகாதார தரப்பினால் போதிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் தொடர்ச்சியாக தம்முடன் இயங்கக் கூடிய முகாம் நடத்துனர் நிர்வாகத்தினருக்கு சேவைகளை முன்னெடுக்கக் கூடியதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, முகாம்களை பொருத்தமட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படும் நபர் வசித்த வீடு முற்றாக மறைக்கப்படுவதுடன், வீட்டுக்கு முன்பாக சுவரொட்டி ஒன்றும் ஒட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் குறித்த வளாகத்தை மற்றைய நபர்கள் பயன்படுத்தாமலும் நடமாடாமலும் இருப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு வெளியில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிகாட்டினார்.
அத்துடன், அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பலர் கூலித்தொழிலில் ஈடுபடுபவர்களாக இருக்கின்ற நிலையில், தற்போது இந்தியாவில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அவர்கள் தமது தொழில்களை இழந்துள்ளனர்.
இதனால் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு அவர்கள் ஆளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், முகாம்களில் இருப்பவர்களுக்கு வழமையாக வழங்கப்பட்டும் உதவித்திட்டங்கள் மற்றும் கொரோனா தொற்றுக்காலப்பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் அமைப்புகளினால் பெற்றுக்கொடுக்கப்பட்டும் உதவிகள், அரசாங்க உதவித்தொகை என்பன தொடர்ச்சியாக பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அகிலா ரட்ணராஜசிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை, சினிமாதுறை சார்ந்தவர்கள், பிரமுகர்கள் ஆகியோரினால் அவ்வப்போது உதவிகள் வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும், ஆனால் கொரோனா முடக்கச்செயற்பாடுகள் காரணமாக அவ்வாறு கிடைக்கும் உதவிகள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க யாரோனும் முன்வரும் பட்சத்தில், அது குறித்த மக்களுக்கு பெரும் உதவியாக அமையும் எனவும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அகிலா ரட்ணராஜசிங்கம் இதன்போது தெரிவித்தார்.
இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது நாட்டில் இருந்து வெளியேறி, இந்தியாவிடம் தஞ்சம் கோரியவர்கள் இவ்வாறு முகாம்களில் அகதிகளாக இருக்கின்றனர்.
தற்போதைய நிலையில் 19 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இவ்வாறு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் நாட்டில் இயங்கும் 107 முகாம்களில் குறித்த அனைவரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் அகிலா ரட்ணராஜசிங்கம் கூறினார்.
இவர்களில் அன்றாட தொழில் செய்யும் பெரும்பாலானவர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தமது வாழ்க்கையை நடத்தி செல்கின்றனர்.
இந்திய அரசாங்கமானது இலங்கை அகதிகளை முகாம்களில் தங்கவைத்து அவர்கள் வாழ்க்கை நடத்தும் வகையிலான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
மேலும், தனியான நிர்வாக அமைப்பின் ஊடாக அகதிகள் முகாம்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாரிய வாழ்க்கை போராட்டத்தில் தங்களை பாதுகாத்துக்கொள்ள நாடுகடந்த இந்த மக்கள், தற்போது கொடிய நோயான கொரோனாவுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.