மூட்டுவாத அறிகுறிகளும் நோய் பாதிப்பும் பாதுகாத்துக் கொள்வதங்கான வழிமுறைகள் : டாக்டர் முத்து முருக மூர்த்தி (MBBS, MD, MCCP)


மூட்டுவாதம் என்றால் என்ன?

உடலின் மூட்டுக்களில் வலிகள் ஏற்படாத யாரையும் காண்பது அரிது. மூட்டுக்களில் வலி ஏற்பட மிகப் பொதுவான காரணம் காயமடைதலாகும். எனினும் இது தவிர்ந்த பல்வேறு நோய்கள் மூட்டு வலிகளுக்கு முக்கிய காரணங்களாகின்றன ஒருவருடைய வயது, பருவங்களுக்கு ஏற்ப மூட்டு வலியை ஏற்படுத்தும் வெவ்வேறு நோய்கள் முன்னிலை பெறுகின்றன.

உதாரணமாக, பிள்ளைப் பருவத்தில் (Juvenile Chronic Arthritis, Still’s Disease Rheumatic Fever) போன்றவையும் இளம் பராயத்தில் ரூமன்றொயிட் ஆத்திரைட்டிஸ் Rheumatic Arthritis) கவுட் (Gout) SLE Systemic lupus Erethematosis, Ankylosing Spondylitis, Genocidal Arthritis, Reiter’s Syndrome) போன்ற நிலைமைகளும் முதுமைப் பருவத்தில் ஒஸ்ரியோ ஆத்திரைட்டிஸ் Osteo Arthritis) ரூமன்றொயிட் ஆத்திரைட்டிஸ் போன்ற நோய்களும் முன்னிலை பெறுகின்றன.

இவை தவிர வைரஸ் நோய்களுக்கு பின்னரான மூட்டு வலி (Post Viral Arthritis)) குடல் நோய்களுடன் நேர்ந்த மூட்டு வாதம் (Enteropathic Arthritis) என்பன வயது வேறுபாடின்றி பாதிப்பை ஏற்படுத்தும்.

இவற்றுள் முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தும் மூட்டுவாதம் பற்றி சொல்ல முடியுமா?

முடக்கு வாதம் அதாவது, ரூமன்றொயிட் ஆத்திரைட்டிஸ் முக்கியமானது. ஏனென்றால் இளம் பராயத்தில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கினாலும் இதனால் ஏற்படும் சிக்கல்கள் முதுமைக் கால வாழ்க்கையை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கி விடுகின்றன.

எமது உடல் நோய் எதிர்ப்பு சக்தி பிறள்வாகி வேலை செய்வதனால் மூட்டுக்களில் உள்ள மென் சவ்வுக்கு எதிரான செயலிகளை (Anti Body) உருவாக்குகிறது. இவை மூட்டு மென் சவ்வுகளை பாதித்து அலர்ச்சியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

இந்நோயின் குணங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டால், கை, கால் விரல்கள், மூட்டுக்களில் வலி மற்றும் வீக்கம் ஏற்படத் தொடங்கும். இந்த வலி காலை வேளையில் அதிகமாக காணப்படுவதோடு காலை நேரத்தில் விரல் மூட்டுக்களை அசைக்க முடியாதளவு இறுக்கமாகவும் காணப்படும். விரல் மூட்டுக்களின் வலி காரணமாக கைகளின் பலமும் செயல்திறனும் குறைந்து செல்கிறது.

பெரிய மூட்டுக்கள் என்று சொல்லப்படுகின்ற தோள், இடுப்பு, முழங்கை, முழங்கால் போன்ற மூட்டுக்கள் மூட்டுவாதத்தால் பதிக்கப்படுமா?

அனைத்து மூட்டுக்களும் பாதிக்கப்படும். சில வேளைகளில் பெரிய மூட்டுக்கள் என்று சொல்கின்ற தோள், இடுப்பு, முழங்கை, முழங்கால்,மணிக்கட்டு, காரைக்கால் போன்ற எல்லா மூட்டுக்களிலும் இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்படலாம். பெரிய மூட்டுக்களில் இதன் தாக்கம் ஏற்படும்போது மூட்டைச் சுற்றியுள்ள தசை நார்கள் அலர்ச்சிக்கு (Tendinitis) உள்ளாகலாம். அதுபோன்று மூட்டைச் சுற்றியுள்ள சும்மாடுகளும் அலர்ச்சிக்கு உள்ளாகலாம்.

நீண்ட காலமாக மூட்டுக்களில் அலர்ச்சி காணப்படும்போது மூட்டு மென்சவ்வு மற்றும் மூட்டு கரியிழையம் சிதைவடைகின்றன.. அத்துடன் மூட்டைச் சுற்றியுள்ள தசை நார்களும் பலவீனமடைகின்றன. இது மூட்டில் ஏற்படும் வலியை அதிகப்படுத்துவது மட்டுமின்றி மூட்டின் ஸ்திரத்தன்மையும் குறைக்கிறது. இதனால் காலப்போக்கில் மூட்டின் சாதாரண ஒழுங்கமைப்பு பாதிக்கப்பட்டு விகாரமடைகிறது.

மூட்டுவாத நோயில் உருவாகும் எதிர் செயலிகள் (Anti Body) மூட்டு மென்சவ்வை பாதிப்பதுபோல் இதையொத்த ஏனைய மென்சவ்வுகளையும் பாதிக்கிறது. அதன் காரணமாக நுரையீரல் நுரையீரல் உறை (Pleura), இதயம், இதய உறை (Pericanlum) என்பனவும் பாதிக்கப்படுகின்றன.. நீண்டகால அடிப்படையில் இவை பல்வேறு சிக்கல் நிலைமைகளை தோற்றுவிக்கும்.

முதுமைப் பருவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒஸ்ரியோ ஆத்திரைற்றிஸ் பற்றி விளக்க முடியுமா?

வயது அதிகரிக்கும்போது மூட்டுக்களில் உள்ள கசியிழையம் தேய்வடைந்து மூட்டு மென்சவ்வுக்கு உள்ளே இருக்கும் திரவம் காய்ந்து போவதால் மூட்டுக்களில் வலி உருவாகிறது. இது முடக்குவாதம் அல்லது ஒஸ்ரியோ ஆத்திரைற்றிஸ் என்று அழைக்கப்படும்.

இதன் தாக்கம் பொதுவாக முழங்கால் மூட்டுக்களில் ஏற்படத் தொடங்கும். ஏனென்றால், முழங்கால் மூட்டுக்கள் உடலின் பாரத்தை தாங்குவதோடு அசைவு கூடிய பகுதியும் ஆகும். முடக்குவாதம் உடம்பில் எல்லா மூட்டுக்களையும் பாதிக்கும். கை, கால்களில் உள்ள சிறிய மூட்டுக்கள் முதல் தோள்பட்டை முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு என எல்லா மூட்டுக்களையும் இது பாதிக்கும். விசேடமாக இந்த நோய்த் தன்மை முள்ளந்தண்டு மூட்டுக்களையும் பாதிக்கச் செய்கிறது.

குறிப்பிட்ட வயது என்றில்லாமல் வெவ்வேறு வயது வித்தியாசத்தில் ஏற்படுகிறதே அதற்கான காரணம் என்ன?

பாரம் தாங்கும் மூட்டுக்களைப் பொறுத்தவரை உடலின் பாரம் மிக முக்கிய காரணியாக அமைகின்றது. உடல் பாரம் கூடியவர்களுக்கு முழங்கால் மூட்டுக்கள் இலகுவாக தேய்வடையும். அதுபோல் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும். அதிகமாக படிகளில் ஏறி இறங்குவோருக்கும், நிற்கின்ற அல்லது தொடர்ந்து நிற்க வேண்டிய கொழிலாளர்களும் இந்த பாரம் தாங்கும் மூட்டுக்களின் தேய்மானத்துக்கு இலகுவில் உள்ளாகிறார்கள். அதனாலேயே வயது வித்தியாசமின்றி வருவதற்கான காரணமாகும்.

மேலும் முதுமையுடன் சேர்ந்து வருகின்ற எலும்பு மென்மையடைதல் காரணமாக எலும்பு முடிவிடங்கள் பாதிக்கப்படும்போது அதையடுத்த மூட்டு ஒஸ்ரியோ ஆத்திரைற்றிஸ் தாக்கத்துக்கு உள்ளாகிறது. நாம் உண்ணும் உணவில் அடங்கிய போஷனை, மூட்டு கசியிழையம், மூட்டு மென்சவ்வு என்பவற்றை போசித்து பராமரித்து அவசியமான ஊட்டச் சத்துக்கள் அடங்கியதாக இல்லாதபோது, இழையங்களில் சாதாரணமாக நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் சமநிலை சிதைவை நோக்கி சரிவதால் கசியிழையம், மூட்டு மென்சவ்வு செயலிழக்கும்போது மூட்டுத்தரவ சுரப்பும் குறைகிறது.

ஒஸ்ரியோ அத்திரைற்றிஸ் பெண்களையே அதிகம் தாக்குகிறது அதற்கான காரணம் என்ன?

இதற்கு முக்கிய காரணம் பெண்களின் உடலில் ஏற்படும் ஹோமோன் மாற்றங்களாகும். மாதவிடாய் சக்கரம் நின்ற பின்னர் ஈஸ்ரோஜன் கோமோன் குறைவடைவதால் வயதான காலங்களில் எலும்புகள் மென்மையடைவது போன்வற்றால் ஒஸ்ரியோ ஆத்திரைற்றிஸ் அதிகரிக்கக் காரணமாககிறது. சமநிலை உணவுகள் தவிர்த்தல் அல்லது எடுக்க முடியாமை இதற்கு மேலும் காரணமாக அமைந்து விடுகிறது.

இதிலிருந்து பெண்கள் பாதுகாப்பு பெறுவது எவ்வாறு?
சாதாரணமாக நடந்து திரிதல், சிறு வீட்டு வேலைகள் அல்லது வீட்டுத் தோட்டம் செய்தல் போன்ற விடயங்களில் ஈடுபடுவது சிறந்ததாகும். இதன் பாதிப்புப்புக்குள்ளானவர்கள் மாதவிடாய் சக்கரம் முடியும்போது கோமோன் மாற்றீடு சிகிச்சை மற்றும் கல்சியம், விற்றமின் டி என்பவற்றை எடுத்துவர வேண்டும்.

சோயா, நல்லெண்ணை போன்றவற்றில் இயற்கையான ஈட்ரோஜனை ஒத்த பதார்த்தங்கள் காணப்படுவதால் இவற்றை குறித்த காலப்பகுதியில் கிரமமாக எடுப்பதும் சிறந்ததாகும்.

இதன் அறிகுறிகள் எவ்வாறு காணப்படும்?

பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் ஏற்படும் வலி, முக்கியமாக அசையும்போது உண்டாகும் வலி, மூட்டு வீக்கம், மூட்டுக்களின் உருவமைப்பு மாறுபடுதல் என்பன ஏற்படலாம். மேலும் கை விரல் மூட்டுக்களில் ஏற்படும் வலி காரணமாக கைகளின் பலம் குறைவதோடு செயற்றிறனும் குறைவடைகிறது. முள்ளந்தண்டு மூட்டுக்கள் பாதிப்படையும்போது, கழுத்து வலி, இடுப்பு வலி என்பன ஏற்படுவதால் அதிக நேரம் நிற்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

இந்த நோய்க்கு எவ்வாறான சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன?

நோயின் ஆரம்பக் கட்டங்களில் மிதமான உடற்பயிற்சிகள் நடை, யோகா, நீச்சல் போன்றன வழங்கப்படுகின்றன மிக முக்கியமாக வலியின் தன்மைக்கு ஏற்பவும் கசியிழைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்து வகைகள் பரிந்துரைக்கப்படும். உடற் பருமனை குறைத்தல் முடக்குவாத சிகிச்சையில் முக்கிய பங்கை வகிக்கிறது.

இவைகளைத் தான்டி முடியாவிட்டால் சத்திர சிகிச்சை முறையை மேற்கொள்வோம். தற்காலத்தில் சிகிச்சை முறைகளால் மூட்டுக்களில் ஏற்படும் தேய்மானத்தை முற்றாக இல்லாதொழிக்க முடியாது. இதனால் இந்த தேய்மானம் சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கிறது. குறித்த ஒரு நிலைமைக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது என்றால், அதன் இயங்கு நிலையை தக்கவைத்துக்கொள்ள மூட்டுக்கள், முக்கியமாக முழங்கால், இடுப்பு என்பன மாற்றவேண்டி ஏற்படலாம்.

ஒரு மூட்டு பகுதியளவிலோ அல்லது முழுதாகவோ மாற்றப்படலாம். இதற்கு உடல் இழையங்களுக்கு தீங்கிழைக்காததும், உறுதியானது ஆன உலோகத்தால் செய்யப்பட்ட செயற்கை மூட்டுக்கள் பாவிக்கப்படுகின்றன.

பிள்ளைப் பருவத்தில் ஏற்படும் மூட்டு வலிகள், நோய் பற்றி கூற முடியுமா?

நமது நாட்டைப் பொறுத்தளவில் இங்கு முக்கியமாக காணப்படுவது மூட்டு வாத காய்ச்சலாகும். இது பக்ரீரியாவால் ஏற்படும் தொண்டை அழர்ச்சி அல்லது தோல் அழர்ச்சியின் பின்னர் நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தி பிழையாக வேலை செய்வதால் உருவாகும் சுய எதிர் செயலிகள் உடலில் பல்வேறு பகுதிகளையும் தாக்குகின்றன. முக்கியமாக மூட்டு மென்சவ்வு தாக்குதலுக்கு இலக்காகிறது. இதன்போது ஏற்படும் மூட்டு வலி ஒரு மூட்டியிருந்து இன்னொரு மூட்டுக்கு தாவும் தன்மையுடையது.

இந்த நோயின் முக்கிய அவதானம் யாதெனில், இருதய மென்சவ்வுகள் பாதிக்கப்படுவதாகும். அவ்வாறு பாதிக்கப்படுவதால் இதய வால்வுகள் பிதுங்குதல் அல்லது சுருக்கமடைதல் போன்ற காரணமாக ஏற்படக்கூடிய இதய பலயீனம், நுரையீரல் பலயீனம் என்பன பலயீனமடைகின்றன. இந்த நோய் மூளையைப் பாதிக்கும்போது பாதிக்கும்போது (Sydenham’s Chorea) எனப்படும் நரம்புத் தளர்ச்சி நோய் எற்படுகிறது.

பிள்ளைப் பராயத்தில் சில வகை மூட்டு நோய்கள் காணப்படுகிறது. அவற்றுள் tills Disease பொவாக காணப்படுகிறது. Stills Disease இல் பெரிய மூட்டுக்கள் (முழங்கால், முழங்கை, மணிக்கட்டு) போன்ற இடங்களில் கடுமையான வலி ஏற்படுகின்றது. அத்துடன் மண்ணீரல் அலர்ச்சி, குருதிக் கலங்களின் எண்ணிக்கை மாற்றங்கள் அழர்ச்சி சுட்டிகள் போன்றவை மிகவும் உயர்ந்து காணப்படும்.

மூட்டுவாதக் காய்ச்சலை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

ஒருமுறை மூட்டுவாதக் காய்ச்சல் ஏற்பட்டால் மீண்டும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான மருந்துகளை உரிய நேரத்துக்கு வழங்கவேண்டும். நெருக்கடியான, காற்றோட்டம் குறைந்த சூழலில் வாழ்வோரை இந்த நோய் அதிகமாக தாக்குகிறது. அதனால் நெருக்கடியற்ற, காற்றோட்டமுள்ள சூழலில் வாழ்வதற்கான ஏற்படுகள் ஏற்படுத்தப்படவேண்டும். தொண்டை நோவு அடிக்கடி ஏற்படும் பிள்ளைகளுக்கு அவ்வப்போது சரியான சிகிச்சை வழங்கப்படவேண்டும்.

மூட்டு வாதத்தை இனங்காண்பது எப்படி?

அந்த நோயை கண்டறிவதற்கு முக்கியமாக நோயாளியின் நோய் வரலாற்றை முதலில் அறிந்துகொண்டதன் பின்னர் அந்த நோயாளி பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான மேலதிக இரத்தப் பரிசோதனைகள் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக, இரத்தப் பரிசோதனையில் மூட்டு வலிக்கான காரணியை அறிந்துகொள்ள இன்னும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இது தவிர பல அடிப்படை பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மூட்டு அலர்ச்சி நிலையை ஏற்படுத்தவல்ல வேறு நோய்களுக்கான பரிசோதனைகளும் மேற்கொண்டு அதற்கான காரணிகளை ஆராய்ந்து நோய் நிருணயம் செய்யப்படும்.

இதற்கு எவ்வாறான சிகிச்சை முறைகளை மேற்கொள்வீர்கள்?

மூட்டு வலி மற்றும் அழர்ச்சியை குறைப்பதற்கான மருந்துகளும் நோயை சீர் செய்யும் மருந்துகளையும் முதலில் வழங்கி அதற்கான சிகிச்சை முறை ஆரம்பிக்கப்படும். அதன் பின்னர் நோயாளியின் முன்னெற்றத்தைப் பொறுத்தே ஏனைய சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகளும் அதற்கெற்றாப்போல் மாற்றம் செய்யப்படும்.

நோயை சீர் செய்யும் மருந்துகளில் சாதாரண வகை மற்றும் உயிரியல் வகை மருந்துகள் காணப்படுகின்றன. இவ்வகை மருந்துகளை உட்கொள்ளும்போது மிக அவதானமாக இருக்கவேண்டும். ஏனெனில் அதில் பக்க விளைவுகளும் இருப்பதால் வைத்திய நிபுணரின் சிபாரிசினைப் பெற்ற பின்னரே அவைகள் உள்கொள்ளவேண்டும். அவ்வாறில்லை என்றால், ஈரல் அலர்ச்சி, நுரையீரல் நார்ப்பிடிப்பு, எலும்பு மச்சை செயலிழப்பு போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.

மருந்துகள் தவிர்ந்த வேறு சிகிச்சை முறைகள் உள்ளனவா?

ஆமாம், உடலியக்க சிகிச்சை முறைகள் (Phலளழைவாநசயில) மூட்டு வலி சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வலியைக் குறைப்பதற்கு மசாஜ், வெது வெதுப்பான நீர் சிகிச்சைகள் வெதுவெதுப்பான மெழுகுச் சிகிச்சை, ஒத்தடம் போன்ற முறைகள் மூட்டு வலிக்கு உதவக்கூடியதாக இருக்கின்றன. இது தவிர பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கான விசேட அசைவு பயிற்சிகளும் மிகவும் பிரயோசனமானதாக அமைந்து காணப்படுகிறது. அதாவது நீச்சல் பயிற்சியில் தசைகாண் பலத்தை மேம்படுத்த மிகவும் உபயோகமாக காணப்படுகிறது.

மூட்டுக்கள் விகாரமடைந்து சிரமப்படும் நோயாளிக்கு நடமாடுவதற்கும் தமது அன்றாட கடமைகளை செய்வதற்கான விஷேட பயிற்சிகள் அவசியமாகிறது. மூட்டுக்களை அசைப்பதற்கான விசேட பொறிமுறைகள் மூலம் சற்றே வாழ்க்கையை இலகுவாக்கின்றன. நோயாளியை சுதந்திரமாக இயங்க வைக்கும் பொறிமுறைகள் மற்றும் வசதிகள் இன்றியமையாதவையாக காணப்படுகின்றன.

மூட்டு வலி போன்று தீவிரமாக பாதிக்கக்கூடிய ஏனைய நோய்கள் என்ன?

மூட்டுகளில் பளிங்குகள் படிவதால் ஏற்படும் வலி வர்க்கத்தில் Gout மற்றும் Pseudo Gout அனேகமானவருக்கு ஏற்படுகின்றது. இது யூரிக் அமில பளிங்குகள் மூட்டுக்களில் படிவதால் ஏற்படுகின்றது. உடலின் குளுமையான மூட்டுக்கள் இந்த நோயால் முதலில் பாதிக்கப்படும். உதாரணமாக, கால் கட்டை விரல் மூட்டுக்கள் முதலில் பாதிக்கப்படும். குருதியில் யூரிக் அமில அளவை மதிப்பிடுவதன் மூலமும் இங்கு நோய் நிருணயம் செய்யப்படுகிறது. இதற்கு சிகிச்சை முறையாக NSAID வர்க்க மருந்துகள் யூரிக் அமில உற்பத்தியை மட்டுப்படுத்துகிறது. கொல்கிசின் (Colchicine) யூரிக் அமிலம் உடலிலிருந்து சிறு நீரில் வெளியேறுவதை ஊக்குவிக்கும்.

யூரிக் அமிலம் பற்றி கூறுனீர்கள் அது எவ்வாறு உருவாகிறது?

உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின்போது சிதைவடையும் கலங்களிலிருந்து பிரியும் பியூரினாலும் உடையும் பியூரின் மிகுதியான மற்றும் சீனிச்சத்து கூடிய உணவுகளாலும் யூரிக் அமிலம் உருவாகிறது. அதுமட்டுமல்ல புற்றுநோய் சிகிச்சையின்போது புற்று நோய்க்குள்ளான கலங்கள் சிதைவடைவதால் அதிகளவான யூரிக் அமிலம் உருவாகிறது. இதனால் புற்றுநோய் சிகிச்சையின்போது இதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

சிறுநீரக பாதிப்புக்குள்ளான நோயாளர்களில் யூரிக் அமிலம் வெளியேற்றப்படல் குறைவடைவதால் புழரவ ஏற்படுகிறது. இதைத் தவிர சோரியாசிஸ் நோய் உள்ளவர்களில் சோராற்றிக் ஆத்திரைற்றிஸ் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் பொதுவாக மூட்டு வலியை ஒத்திருக்கும். விசேடமாக இங்கு சொறாற்றிக் படலங்களினால் நகத்தில் மாற்றங்கள் காணப்படும்.

வைரஸ் நோய்த்தாக்கத்தினால் ஏற்படும் ஆத்திரைற்றிஸ் (வலி) (Viral Arthritis) என்பது பெரும்பாலும் தானாக அடங்கிவிடும். சிக்குன்குன்யா நோயின்போது அக்கரை இல்லாமல் தொடர்ந்து வேலை செய்தவர்கள் பலர் இன்னும் அந்த வைரஸின் பின்னான ஆத்திரைற்றிஸிலிருந்து மீள முடியாதவர்களாக அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Previous Post Next Post


Put your ad code here