Monday 12 October 2020

நாணயத்தாள்கள், கைபேசி திரை உள்ளிட்டவற்றில் 28 நாள்கள் கொரோனா வைரஸ் உயிர் வாழும் : புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு..!!!

SHARE


நாணயத்தாள்கள், கைபேசி திரைகள், துருப்பிடிக்காத உருக்கு போன்றவற்றில் கொரோனா வைரஸ் 28 நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் தேசிய விஞ்ஞான நிறுவனம் அந்த ஆய்வை நடத்தியது.

ஆய்வுக் கூடத்தில் ஊதாக்கதிர் கொண்ட இருட்டான சூழலிலும் அந்த வைரஸ் 28 நாட்களுக்குத் தாக்குப்பிடித்ததைத் தொடர்ந்து, ஆய்வாளர்கள் அது பற்றி தகவல் அளித்தனர்.

பொதுவாக ஊதாக்கதிர் அந்த வைரஸை அழித்துவிடும் தன்மை கொண்டது எனக் கருதப்படும் நிலையில், ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அந்த வைரஸ் எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதல் காலம் தாக்குப்பிடிப்பதாக அது குறிப்பிட்டது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பொதுவாக இருமும்போது, தும்மும்போது, பேசும்போது வைரஸ் மற்றவர்களுக்குப் பரவுகிறது.

மக்கள் அதிகமாகத் தொடும் மேற்பரப்புகள் வழி, வைரஸ் பரவல் ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவாக இருந்தாலும், வைரஸ் அதன் மூலம் பரவலாம் என அமெரிக்க நோய்த் தடுப்பு நிலையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

இதற்கு முன்னர் ஆய்வுகூடத்தில் செய்யப்பட்ட சோதனையில் கொவிட்–19 வைரஸ் நாணயத்தாள்கள், கண்ணாடியில் இரண்டு, மூன்று நாட்களும் பிளாஸ்டிக் மற்றும் துருப்பிடிக்காத உருக்கில் ஆறு நாள் வரையும் தக்குப்பிடிப்பும் என்று கூறப்பட்டது.

ஆனால் இந்த வைரஸ் மிகவும் வலுவாக இருப்பதாகவும் கைபேசி திரை, பிளாஸ்டிக் மற்றும் காகித நாணயத்தாள்கள் ஆகிய மிருதுவான மேற்பரப்புகளில் இருளில் 20 பாகை செல்சியஸ் வெப்பத்தில் 28 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் என்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சளிக்காய்ச்சல் வைரஸுடன் ஒப்பிடுகையில் இதே சூழலில் அது 17 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் கொவிட்–19 வைரஸ் தொற்று குளிரான வெப்ப நிலையை விடவும் சூடான வெப்பநிலையில் குறைவாகவே தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டிருப்பதாக வைரோலஜி சஞ்சிகையில் வெளியாகி இருக்கும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில மேற்பரப்புகளில் 40 பாகை செல்சியஸில் இந்த வைரஸ் 24 மணி நேரத்திற்குள் அழிந்துவிடுகிறது.

எனினும் துணிகளில் 20 பாகையில் 14 நாட்களுக்கு மேல் இந்த வைரஸை அவதானிக்க முடியவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 30 பாகை வெப்பநிலையில் பருத்தியில் இந்த வைரஸ் மூன்று நாட்கள் மாத்திரமே தாக்குப்பிடிக்கும் திறனை கொண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE